Our Feeds


Thursday, October 1, 2026

Zameera

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்ற வர்த்தக நிலையத்திற்கு 5 லட்சம் அபராதம்

 


அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக, பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. 


நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள, 2024.12.09 ஆம் திகதியுடைய 2414/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 90 ஆம் இலக்க உத்தரவிற்கமைய, உள்ளூர் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இவ்வுத்தரவு 2024 டிசம்பர் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. 


குறித்த வர்த்தக நிறுவனம் 5 கிலோ கிராம் எடையுள்ள கீரி சம்பா அரிசிப் பொதியை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான 1,300 ரூபாவிற்குப் பதிலாக 1,850 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளது. 


இதற்கமைய, ஒரு கிலோ கிராமிற்கு நிர்ணயிக்கப்பட்ட 260 ரூபாவிற்குப் பதிலாக 370 ரூபா வீதம், அதாவது ஒரு கிலோ கிராமிற்கு 110 ரூபா வீதம் மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளதுடன், 5 கிலோ கிராம் பொதிக்காக மேலதிகமாக அறவிடப்பட்ட மொத்தத் தொகை 550 ரூபாவாகும். 


குறித்த வழக்கு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் 500,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார். 


கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசி வகைகளை விற்பனை செய்யும்போது, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக பணம் அறவிடுவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 


கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. 


மேலும், அரிசியைக் கொள்வனவு செய்யும்போது, நுகர்வோர் குறித்த அரிசி வகை மற்றும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 


கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி அல்லது பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான தகவல்களை '1977' என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்குத் தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »