Our Feeds


Saturday, October 3, 2026

Zameera

சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தானாகவே தோன்றிய சம்பவங்கள் அல்ல - ஹர்ஷன நாணயக்கார


 (எம்.ஆர்.எம்.வசீம்)


சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தானாகவே தோன்றிய சம்பவங்கள் அல்ல. சில சம்பவங்கள் வெளிக்கள தாக்கங்களாலும், மற்றவை உள்ளக காரணங்களாலும் ஏற்பட்டவைகளாகும். அதேநேரம் சிறைச்சாலை நெரிசலை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.


குருவிட்ட சிறைச்சாலையில் கூட்டு பொறிமுறை ஒன்றை அமைக்கும் வேலைத்திட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (01) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


கடந்த இரண்டு மாதங்களுக்குள் போதைப்பொருள் தொடர்பான 17,506   ராசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம். அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 9,061 பகுப்பாய்வு அறிக்கைகளும், செப்டம்பர் மாதத்தில் 8,445 அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக, ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், சமூக சீர்திருத்தச் சட்டம் உள்ளிட்ட அவசியமான சட்டங்களைத் திருத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.



கடந்த காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தானாகவே தோன்றிய சம்பவங்கள் அல்ல. சில சம்பவங்கள் வெளிக்கள தாக்கங்களாலும், மற்றவை உள்ளக காரணங்களாலும் ஏற்பட்டவைகளாகும். முப்பது, நாற்பது ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த நிலைமையை மாற்றும்போது எதிர்ப்புகள் எழுவது இயல்பு. அவற்றை எதிர்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தவறான செயல்களால், ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. குறுகிய கால லாபங்களை எதிர்பார்த்து மனிதநேயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.


எமது அரசாங்கம் அரசியல் கலாசாரத்தை மாற்றியுள்ளது. இப்போது நாம் இரக்கமுள்ள நபர்களை உருவாக்க வேண்டும். நாட்டில் நிலவும் இந்த நிலைமையை மாற்ற முடியும். இருப்பினும், தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மக்கள் இருக்கும் வரை அதனைச் செய்வது கடினம். "கைதிகளும் மனிதர்களே" என்பது சிறைச்சாலைச் சுவருக்கு மாத்திரம் வரையறுக்காமல் , குறிப்பாகக் கைதிகளின் நலனோம்புகளில் கவனம் செலுத்தினால் பிரச்சினைகளை குறைக்க முடியும்.


நாம் புதிய முறைகளை அறிமுகப்படுத்தும்போது, பழைய ஊழல் முறைக்கு அனுமதிப்பதில்லை. சட்டம் கடுமையாகச் செயல்படுவதால் தற்போது பலர் பதற்றமடைந்துள்ளனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »