Our Feeds


Friday, October 9, 2026

Zameera

சிவராசா அனோஜன் விவகாரம்: அவதூறு பதிவுகளைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்புடைய அவதூறான கருத்துகள் மற்றும் முரண்பாடான முகநூல் பதிவுகளைத் தவிர்க்குமாறு கல்முனை தலைமையகப் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.




கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




அத்துடன், இன வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து, சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஊடாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், சிலரால் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் வெளியிடப்படும் கருத்துகள் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.




எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதையும், விஷமத்தனமான பேச்சுகள் மற்றும் முகநூல் பதிவுகளைப் பகிர்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.




கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




(பாறுக் ஷிஹான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »