சர்வதேசக் கடற்பரப்பில் சிக்குண்டுள்ள ஈரானியக் கப்பல்களுக்கு உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், தெற்காசியப் பிராந்தியத்தைப் போர் அற்ற வலயமாகப் பேணுவதற்குப் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சி வெள்ளிக்கிழமை (9) வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் கடற்பரப்புக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுடன் தொடர்புடைய 15 முதல் 25 வரையான எண்ணெய்க் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 கப்பல்கள் நங்கூரமிட்டோ அல்லது பயணித்துக்கொண்டோ இருப்பதாக அண்மைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கடற்படைத் தடையை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் முதல் இக்கப்பல்கள் ஈரானுக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.செய்திகளைப் படி
நீண்டகாலமாக இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாத நிலையில் உள்ள இக்கப்பல்களின் இயந்திரங்களைச் செயலிழக்கச் செய்து, எரிபொருளைச் சேமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவற்றில் பணியாற்றும் மாலுமிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரானியக் கப்பல்கள் இலங்கையிடம் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருளைக் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், அவ்வாறான உத்தியோகபூர்வ கோரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கை இரண்டாம் நிலைத் தடைகளுக்கு உள்ளாகக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய சில நாட்களுக்குள் அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
இலங்கை இறைமையுள்ள நாடு என்ற வகையில், மனிதாபிமான உதவிகளைக் கோருவோருக்கு அவற்றை வழங்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களால் இலங்கை புவிசார் அரசியல் மோதலுக்குள் இழுக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.பயண வழிகாட்டி
இத்தகைய சூழ்நிலையை மிகவும் விவேகத்துடனும் இராஜதந்திர நுட்பத்துடனும் கையாள வேண்டியது அவசியமாகும். எதிர்காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனித்து முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, தெற்காசியப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். இதன்மூலம் பிராந்தியத்தின் அமைதியையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக, 1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அமைதி வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அக்காலப்பகுதியில் இதற்கான தலைமைத்துவத்தை இந்தியாவும் இலங்கையும் வழங்கின.
அந்த அமைதி வலயக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், வளர்ந்து வரும் போர் நிலைமைகளுக்கு மத்தியில் அனைத்து நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான பொதுவான இணக்கப்பாட்டைத் தெற்காசிய நாடுகள் உருவாக்க வேண்டும்.
மேலும், செயலற்ற நிலையும் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையும் காரணமாக இலங்கை சர்வதேச ரீதியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை எதிர்கொள்ளக்கூடும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் அரச தலைவர்கள் மட்டத்திலான அவசரக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, பிராந்தியப் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அத்துடன், தெற்காசியப் பிராந்தியத்தின் முற்போக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவளித்து, போர் நிலைமைகளுக்கு மத்தியிலும் அனைத்துப் பிராந்திய நாடுகளுக்கும் பாகுபாடின்றி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்த நோக்கத்தை அடைவதற்காகத் தெற்காசிய நாடுகளின் கூட்டு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குமாறு அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
