(எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்துக்கு பாரிய அச்சிறுத்தலாகும். அதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இந்த இரண்டு சட்டமூலங்களையும் வன்மையாக நிராகரிக்கிறது என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
இது தொடர்பாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் ஆகிய இந்தச் சட்டமூலங்கள் இரண்டும் ஒன்றாகச் சேரும்போது, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தச் சட்டமூலங்கள் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் புதிய அதிகாரங்கள், மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நிறுவப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய நீண்டகால உள்நாட்டு மோதல்களின் போதும், 1987-90 காலப்பகுதியில் தெற்கில் நிலவிய பயங்கரவாதக் காலத்தின் போதும், பயங்கரவாதக் கொலையாளிகளின் துன்புறுத்தல்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் முகங்கொடுத்துள்ளது. எனவே, பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டிய அவசியத்தை எமது கட்சி நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.
இருப்பினும், 1983 ஆம் ஆண்டில் ஆளுங்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அன்றைய அரசாங்கம் அக்கட்சியை தடை செய்யவும் அதன் தலைவர்களை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தது. எனவே, ஜனநாயக எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும், சமூக இயக்கங்களை அடக்கவும் அல்லது பிரஜைகளின் அரசியலமைப்பு உரிமைகளைப் பலவீனப்படுத்தவும் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
இந்தச் சட்டமூலங்களில் உள்ள பரந்த அதிகாரங்களும் ஏற்பாடுகளும், தற்போதுள்ள சட்டங்கள் அல்லது ஒழுங்குவிதிகளின் சில ஏற்பாடுகளை பலவீனப்படுத்தவோ அல்லது ரத்து செய்யவோ வழிவகுக்கலாம். இதன் மூலம் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் தன்னிச்சையாக செயல்படுத்துவதற்கும் கடுமையான ஆபத்து எழக்கூடும்.
குறிப்பாக, சிறிய தவறுகள் கூட குற்றங்களாகப் பெயரிடுதல், கருத்துச் சுதந்திரத்திற்கு (ஊடக அறிக்கையிடல் மற்றும் சில வேளைகளில் உடலில் பச்சைக் குத்துதல் போன்றவையும் உட்பட) அச்சுறுத்தல் ஏற்படுதல், நிரைவேற்று அதிகாரம் அளவுக்குமீறி விரிவடைதல் மற்றும் தடுத்துவைத்தல், பிணை வழங்குதல், ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் தொடர்பான நிபந்தனைகளை மாற்றுதல் போன்ற விரிவான ஏற்பாடுகள் மிகுந்த கவலையை அளிக்கின்றன.
பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்டங்களும் நிறுவனங்களும் போதாது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி நிரூபிக்கப்படாத நிலையில், தடுத்துவைத்தல், பிணை நிபந்தனைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக அரச அதிகாரங்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது தேவையற்றது, சமமற்றது மற்றும் ஜனநாயக சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு படியாகும்.
நாட்டைப் பாதுகாத்தல் அல்லது பொது அமைதியைப் பேணுதல் என்ற பெயரில் அசாதாரண அதிகாரங்களைக் கோரும் சந்தர்ப்பங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இலங்கையின் கடந்தகால பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான அனுபவங்கள் சாட்சியமளிக்கின்றன.தீவுகள் ஆராயுங்கள்
ஜனநாயகம், சமூக நீதி, தேசிய இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அர்ப்பணித்து செயற்ட தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகள், ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் மற்றும் மாணவர் இயக்கங்கள் அத்துடன் இது குறித்து கவனம் செலுத்தும் பிரஜைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தேசிய பாதுகாப்பை பாதுகாத்தல், எப்போதுமே சிவில் சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது சட்டபூர்வமான ஜனநாயக நடவடிக்கைகளை அடக்குவதற்கோ ஒருபோதும் சாட்டாக அமையக்கூடாது.
