Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

இந்தியாவில் 137 புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு!

 

புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு மேலும் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 137 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.



தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார சபை  தேர்வு செய்யப்பட்ட இந்த மருந்துகளின் வர்த்தக இலாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய விலை ஒழுங்குமுறைகள் வரும் 2026, நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.


இந்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த முடிவு புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிதிப் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட், பெருங்குடல், கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்கான சிகிச்சைகள் இதில் அடங்கும்.


பெம்ப்ரோலிஸுமாப் (pembrolizumab), பெவாசிஸுமாப் (bevacizumab), துர்வாலுமாப் (durvalumab) மற்றும் ஒசிமர்டினிப் (osimertinib) உள்ளிட்ட பல பரவலாகப் பயன்படுத்தப்படும் புற்றுநோய் மருந்துகள் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் திருத்தப்பட்ட விலைகளை சமர்ப்பிக்குமாறு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நவம்பர் 9 முதல் குறைக்கப்பட்ட விலையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


மருந்துப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக, தற்போதைய உற்பத்தி மற்றும் விநியோக அளவைப் பராமரிக்குமாறு மருந்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


முன்னதாக 2019-ஆம் ஆண்டில், 42 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக இலாப வரம்பை அரசு கட்டுப்படுத்தியதன் மூலம், 526 வர்த்தகப் பெயர்களின்கீழ் விற்கப்பட்ட மருந்துகளின் விலை 90% வரை குறைக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


மருந்து விநியோகம் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் அதிகப்படியான இலாப வரம்பைத் தடுக்கும் அதே வேளையில், புற்றுநோய் சிகிச்சையை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதே இந்த தலையீட்டின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மருந்தின் தற்போதைய விலை அமைப்பைப் பொறுத்து உண்மை விலை குறைவு மாறுபடும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »