Our Feeds


Monday, October 12, 2026

Zameera

சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம்: ஊடக அமைப்புகள் கண்டனம்!

 

சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான அவதூறு மற்றும் வெறுப்புப் பிரசாரத்தைக் கண்டித்துள்ள இலங்கை ஊடக அமைப்புகள், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதி கோரி வரும் அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரசாரத்தையும், வன்முறையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளையும் இலங்கையின் பல்வேறு ஊடக அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.


கலகொட அத்தே ஞானசார தேரர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக மீண்டும் சிறைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிராக இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் (FMM) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பிரசாரம் சந்தியா எக்னெலிகொடவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், இலங்கையின் ஜனநாயக விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வெறுப்பு மற்றும் சகிப்பின்மையை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன.


தனிநபர்களைக் களங்கப்படுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், அவர்களுக்கு எதிரான பகைமையைத் தூண்டுவதற்கும் ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவது பொறுப்பான ஊடகவியலுக்கும் ஜனநாயக ஊடகக் கலாசாரத்துக்கும் முரணானது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.


2010 ஜனவரியில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட, தனது கணவருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும், அவரின் காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.


தனது கணவரின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் குரல் கொடுத்து வருகிறார். சட்டரீதியான வழிமுறைகள் மூலம் நீதியை நாடுவதற்காக அவர் அச்சுறுத்தல்களுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாக்கப்படக்கூடாது என ஊடக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு ஹோமாகம நீதவானுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரர் தண்டனை பெற்றுள்ளார்.


இந்த முறைப்பாடு ஹோமாகம நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருந்ததுடன், குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சந்தியா எக்னெலிகொட செயற்பட்டிருந்தார்.


2018 ஆகஸ்ட் மாதம் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019 மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.


எனினும், 2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி, அந்த ஜனாதிபதி மன்னிப்பு தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமானது எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதனைச் செல்லாததாக்கியது.


நீதித்துறைத் தீர்ப்பின் சட்டரீதியான விளைவுகளை, சட்டத்தின் வழியாக நீதியை நாடிய சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிராக வெறுப்பையும் பகைமையையும் தூண்டுவதற்கான காரணமாகப் பயன்படுத்த முடியாது என ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.


கருத்துச் சுதந்திரத்தை இலங்கை ஊடக அமைப்புகள் தொடர்ச்சியாகப் பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவை, அச்சுறுத்தல்கள், வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகள் அல்லது தனிநபர்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பிரசாரங்களை நியாயப்படுத்துவதற்கு இந்த உரிமையைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளன.



சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) 20(2)ஆம் பிரிவு, பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் தேசிய, இன அல்லது மத வெறுப்புப் பிரசாரங்களைச் சட்டத்தின் மூலம் தடைசெய்ய வேண்டிய கடப்பாட்டை அரசுகளுக்கு விதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.செய்தி சந்தா


சந்தியா எக்னெலிகொடவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், நிலைமை வன்முறையாக மாறுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


நீதிமன்றத் தீர்ப்புகள் தமது விருப்பங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சாதகமாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்து சட்டத்தின் ஆட்சிக்கான மரியாதை மாறக்கூடாது என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.


அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், மத அல்லது தேசிய உணர்வுகளை அரசியல் அல்லது தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பயன்படுத்தும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெறுப்பு மற்றும் அச்சுறுத்தல்களை நிராகரித்து, நீதியை நாடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பொறுப்புக்கூறல், சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஊடக மற்றும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் என ஊடக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.


சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU), தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பு – இலங்கை (SAWM), ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் (SLMMF), இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (SLTMA) ஆகியன இணைந்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »