Our Feeds


Monday, October 26, 2026

Zameera

பயங்கரவாதச் சட்டமூலங்கள் மூலம் மேலதிக அதிகாரங்களைப் பெற அரசு முயற்சி - வாசுதேவ நாணயக்கார

 


(க.சிவலிங்கமூர்த்தி)


அரசாங்கம் தேவைக்கு அதிகமாக அச்சமடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் ஏகபோக மற்றும் எதேச்சதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் புதிய பயங்கரவாத அடக்குமுறை சட்டமூலங்களின் ஊடாக மேலதிக அதிகாரங்களைத் தனது கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டினார்.


நாட்டில் கிளர்ச்சிகளோ, யுத்தமோ அல்லது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவிலான மக்கள் அமைதியின்மையோ இல்லாத நிலையில், மக்களின் அனைத்து வகையான சுதந்திரங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய கடுமையான ஜனநாயக விரோதச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது அதன் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கொழும்பிரல் நேற்று சனிக்கிழமை (24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கும் கடுமையான ஜனநாயக விரோதச் சட்டமூலங்களுக்கு எவ்வித நியாயமும் இல்லை என்பதை இலங்கையும் சர்வதேச சமூகமும் நன்கு அறிந்துள்ளன. நாட்டில் கிளர்ச்சிகளோ, யுத்தமோ அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் அமைதியின்மையோ இல்லாத நிலையில், மக்களின் சுதந்திரங்களை முடக்கக்கூடிய இத்தகைய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது அதன் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகின்றது.


இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக இலங்கையின் பல்வேறு தரப்பினரும் சர்வதேச அமைப்புகளும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. விழிப்புணர்வுள்ள தொழில்முறை நிபுணர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இச்சட்டமூலங்களால் ஜனநாயகத்துக்கும் மக்களின் உரிமைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவற்றுக்கான காரணங்களையும் அவர்கள் தெளிவாக முன்வைத்துள்ளனர்.


இருப்பினும், இச்சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை காணப்படுகின்றது.



இவ்வாறான சூழ்நிலையில், எதிர்க்கட்சியினரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும், சட்டமூலங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுவதும் மட்டுமே எதிர்க்கட்சியினரால் செய்யக்கூடியவையாக உள்ளன. அதற்கு அப்பால் அவர்களால் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன


மக்களின் சுதந்திரத்தை முடக்குதல், ஜனநாயகத்தை ஒடுக்குதல் மற்றும் மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களின் பாரதூரமான விளைவுகளைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாகவே, இச்சட்டமூலங்களுக்கு எதிராகப் பரந்தளவிலான மக்கள் எதிர்ப்பு நாட்டில் உருவாகவில்லை.


இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இலங்கையின் வரலாற்றில் இதுவரை நிறைவேற்றப்படாத வகையிலான ஜனநாயக விரோத நிரந்தரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை தற்போதைய அரசாங்கமே முதன்முறையாக முன்னெடுக்கின்றது என்பது எனது கருத்தாகும்.


நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். எனது நீண்டகால அரசியல் அனுபவத்தில் இத்தகைய ஜனநாயக விரோதச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியை இதற்கு முன்னர் கண்டதில்லை.


அரசாங்கம் ஏன் இவ்வாறு செயற்படுகின்றது என்பது முக்கியமான கேள்வியாகும். அரசாங்கம் தேவைக்கு அதிகமாக அச்சமடைந்துள்ளது அல்லது எதிர்காலத்தில் ஏகபோக, எதேச்சதிகார ஆட்சியை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது. அதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கிலேயே புதிய சட்டமூலங்களின் ஊடாக மேலதிக அதிகாரங்களைத் தனது கைகளில் எடுத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »