சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பது இனவாதத்துக்கு எதிராக செயற்படுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இந்த கொள்கைக்கு எதிராக கட்சி செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடந்து இருக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எமது ஷார்ட் நியூஸ் ஊடகத்திட்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினராக லக்ஷ்மன் கிரியெல்ல மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து அல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை கட்சியின் தலைமையோ நாங்களோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவரது கருத்து உண்மையில் தெரிவிக்கக் கூடாது ஒரு கருத்தாகும். அவர் இவ்வாறு தெரிவித்த கருத்து எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. ஏனெனில் அவர் கொவிட் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள், ரிஷாத் பதியுதீனுக்கு கோட்டாபய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக, இவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் ஒருவர்.
எவ்வாறு இருந்தாலும் தற்போது அவர் தெரிவித்திருந்த விடயம் பிழையான கருத்தாகும். கட்சியின் உயர் பீடம் இன்னும் சில தினங்களில் கூட இருக்கிறது. அப்போது இந்த விடயம் தொடர்பாகவும் நாங்கள் பேச இருக்கிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிப்போம். அதேநேரம் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் எமது கட்சிக்கு என ஒழுக்க நெறி ஒன்று இருக்கிறது. அதன் பிரகாரம் கட்சியின் உள் விவகாரம் தொடர்பில் கட்சிக்குள் கதைத்து, தீர்வு காண நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் கட்சி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால்,, அது தொடர்பில் நாங்கள் வெளியில் கதைத்திருப்போம். ஆனால் அதன் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல அது தொடர்பில் எங்கும் கருத்து தெரிவிக்கவில்லை. அவ்வாறு கட்சி கொள்கைக்கு மாறாக கருத்து தெரிிவித்திருந்தால், நாங்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருப்பாேம். ஏனெனில் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அனைத்து இனங்களுடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையும் அதுதான்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி இந்த கொள்கைக்கு எதிராக செயற்படுமாக இருந்தால், அப்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து இருக்கப்போவதில்லை. ஏனெனில் இந்த அரசியல் கட்சிகள் எதுவும் எமக்கு மதம் அல்ல. தொடர்ந்து அந்த கட்சியில்தான் இருக்க வேண்டும் என்றில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் செய்துவருகிறோம் என்றார்.
எழுத்து - (எம்.ஆர்.எம்.வசீம்)
