அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்குச்
சேவைகள் அல்லது விநியோகங்களை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாம் நிலைத் தடைகள் உலகளாவிய ரீதியில் அமல்படுத்தப்படும் பொதுவான கொள்கை நடவடிக்கை என்றும், அவை குறிப்பாக இலங்கையைக் குறிவைத்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.குறிப்பாக இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் பயணிக்கும் ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகள் அல்லது விநியோகங்களை வழங்கினால், இலங்கை மீது சாத்தியமான தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய போதே வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்குச் சேவைகள் அல்லது பொருட்களை வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள், அமெரிக்க நிதி அமைப்பை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் எனத் தெரிவித்து, கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி இந்த இரண்டாம் நிலைத் தடைகள் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருந்தது.
இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் பரந்த தடைக்கட்டுப்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதே தவிர, இலங்கை மீது மட்டுமே பிரத்யேகமாகச் சுமத்தப்பட்ட ஒன்று அல்ல.
இத்தகைய தடைகளுக்கு உள்ளாகும் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போதைய மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் உலகின் பிற கடல் பகுதிகளிலும் இவ்வாறான கப்பல்கள் பயணித்து வருகின்றன.
வணிகக் கப்பல் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த இரண்டாம் நிலைத் தடைகளின் பயன்பாடு மற்றும் இதனால் தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இதிலுள்ள உணர்திறனைக் கருத்திற் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த தரப்பினர் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இவ்வாறான விடயங்களைக் கையாண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
