Our Feeds


Saturday, October 31, 2026

Zameera

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மீண்டும் முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்

 

(நா.தனுஜா)


மிக மோசமான மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய கூறுகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மீண்டும் முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு, இச்சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்னும் பதம் குறுகிய முறையிலும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகவும் வரையறுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


இலங்கையில் சுமார் 47 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்போருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படல் உள்ளடங்கலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் நிகழ்ந்த மீறல்கள் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது


இச்சட்டமூலத்தில் பயங்கரவாதக் குற்றங்களுக்குப் பரந்துபட்டதும், துல்லியமற்றதுமான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் சித்திரவதைகள், முறையற்ற விதத்தில் நடாத்துதல் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் என்பவற்றை எளிதாக்கக்கூடிய பரந்துபட்ட அதிகாரங்களை வழங்குகிறது. 


இச்சட்டமூலமானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் பயங்கரவாதமாக அங்கீகரிக்கப்பட்ட நடத்தைகளின் வரம்புக்கு உட்படாத செயல்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இது சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்படி இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.


அதேபோன்று போராட்டம், பிரசாரம், கருத்து வெளிப்பாடு, வேலைநிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கை என்பன மாத்திரமே பயங்கரவாத செயற்பாடாக அமைந்துவிடாது என இச்சட்டமூலத்தில் கூறப்பட்டிருந்தாலும், இந்தப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. எனவே இச்சட்டம் மாற்றுக்கருத்துடையவர்களை இலக்குவைப்பதற்காகத் தவறாகப் பிரயோகிக்கப்படக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.


அதேவேளை இப்புதிய சட்டமூலமானது சித்திரவதைகள் மற்றும் முறையற்ற விதத்தில் நடாத்தப்படல் என்பவற்றுக்கு ஏதுவான சூழலை உருவாக்கக்கூடிய நீண்டகாலத் தடுத்துவைப்புக்கு அதிகாரம் அளிக்கிறது. 



சட்டமூலத்தின் பிரிவு 29இன் கீழ் சந்தேக நபரை நீதிமன்ற அனுமதியின்றி இரண்டு மாதங்கள் வரை நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கமுடியும். பிரிவு 35இன் கீழ் நீதிவானால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என உயர்ந்தபட்சம் ஒரு வருடம் வரை அதனை நீடிக்கமுடியும். இதன் கீழ் போதிய நீதிமன்ற மேற்பார்வையின்மையானது தன்னிச்சையான தடுத்துவைப்பு, சித்திரவதைகள் மற்றும் ஏனைய மீறல்களுக்கான அபாயத்தைக் கணிசமானளவு அதிகரிக்கிறது.


இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், அதனை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், பயங்கரவாதக் குற்றங்களைக் கையாள்வதற்கு ஏற்றவாறான விகிதாசாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய சாதாரண குற்றவியல் சட்ட வரைவுகளைத் தயாரிப்பது குறித்துப் பரிசீலிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


குறிப்பாக இச்சட்டம் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் 'பயங்கரவாதம்' எனும் பதம் குறுகிய முறையிலும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகவும் வரையறுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.


மேலும் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படும் எந்தவொரு நபரும் 48 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதையும், சகல தடுப்புவைப்பு உத்தரவுகளும் முறையான நீதிமன்ற மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »