Our Feeds


Wednesday, October 7, 2026

ShortNews

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு | ஞானசார தேரருக்கு தண்டனை உறுதியானது - மேன்முறையீடு தள்ளுபடி



இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்று கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியன்று, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஞானசார தேரர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை புதன்கிழமை (07) அன்று திறந்த நீதிமன்றத்தில் வாசித்த மேலதிக நீதவான், பிரதிவாதி தாக்கல் செய்த மேன்முறையீட்டை மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், தண்டனைத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடை, மேல்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் இந்த மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்யும் வரை, வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான ஒரு நாளைத் தீர்மானிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளைக் பரிசீலித்த மேலதிக நீதவான், வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் குற்றவாளியான தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »