Our Feeds


Friday, October 9, 2026

Zameera

தீர்ப்பு வழங்க தாமதமானதால் நீதிமன்ற இருக்கைக்கு தீ வைத்த சட்டத்தரணி

 

நீண்ட நாட்களாகத் தள்ளிப்போடப்பட்ட வழக்கின் தீர்ப்பை வழங்க நீதிபதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சட்டத்தரணி ஒருவர், நேற்று வியாழக்கிழமை (8) நீதிமன்றத்துக்குள்ளேயே தனது இருக்கைக்குத் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானின் சிந்து உயர் நீதிமன்ற (ஹைதராபாத் அமர்வு) எல்லைக்குட்பட்ட நவாப்ஷா பகுதியைச் சேர்ந்த நிலத்தகராறு வழக்கு ஒன்று பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் சட்டத்தரணி சிக்கந்தர் பட்டி என்பவரின் குடும்பத்தினரும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.


கடந்த 11 மாதங்களாக இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று  வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அமர்வு நீதிபதி ஜவாத் அக்பர் சவானா, ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை உடனடியாக வழங்கப்போவதில்லை என்று அறிவித்தார்.


நீதிபதியின் இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சட்டத்தரணி சிக்கந்தர் பட்டி, நீதிமன்றத்திலேயே தனது இருக்கைக்குத் தீ வைத்தார்.


இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் சங்கம் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பதும், தீர்ப்புகள் தாமதமாவதும் வழக்கு தொடுப்பவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் சூழலில், நீதிமன்றத்துக்குள்ளேயே நடந்த இந்தத் தீவைப்பு சம்பவம் அந்நாட்டின் நீதித்துறை தாமதங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »