Our Feeds


Saturday, October 10, 2026

Zameera

கறுப்பு ஜூலை குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை விட பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்தது

 


கறுப்பு ஜுலை சம்பவம் தொடர்பில் ஆராய்வற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற யோசனைக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.ஏனெனில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை காட்டிலும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது சிறந்ததாக அமையும். மக்கள் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுக்கலாம். உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அது சிறந்ததாக அமையும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (09) வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனக்கலவரம்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணையை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,



இந்த நாட்டில் யாரும் சிறுபான்மையினத்தவர்கள் அல்ல, இனத்தாலும்,பிறப்பாலும் ஒருவரை சிறுபான்மை  என்று  குறிப்பிடுவது மனித குலத்துக்கு எதிரானது.இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மத்தியிலும் கோபமும்,வெறுப்பும் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதற்கு வரலாற்று ரீதியிலான தவறுகள் பிரதான காரணியாக காணப்படுகின்றன.மொழிபெயர்ப்பு காண்க


1948.02.04 ஆம் திகதி சுதந்திரம்  பெற்ற போது இனவாரி பிரதிநிதித்துவத்தில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை.1949 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு,  இலங்கையில் வாழ்ந்த  இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.


1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது.இதுவே சகல பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக அமைந்தது.1957 ஆம் ஆண்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்துடன் பிரதேச சபை ஊடாக அதிகார பகிர்வு யோசனை முன்வைக்கப்பட்டது.


இருப்பினும் அதற்கு சிங்கள தேசிய வாதம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அந்த ஒப்பந்தமும் புறக்கணிக்கப்பட்டது.


சுதந்திர பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற தவறுகளினால் தமிழ் மக்கள் பாதிக்கபட்டார்கள்.1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது,  யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் உருவானது. பல விளைவுகளும் இதனால் ஏற்பட்டன.இதுதான் இலங்கையின் கடந்த காலத்தின் ஒருசில வரலாற்று சம்பவங்களாகும்.


இந்த கசப்பான காலத்தை கடந்து நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.இதுவொன்றும் இலகுவல்ல, நல்லிணக்கத்துக்கான உண்மையை கண்டறிய வேண்டும்.


அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  43 ஆண்டுகள் கடந்ததன் பின்னர் ஏதேனும் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை திரட்டுவதில் உள்ள சட்ட பிரச்சினைகளை சட்டத்தரணிகள்  நன்கு அறிவார்கள்.


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்காகவே செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார். இதற்கு இணையாக பிறிதொரு யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.இதற்கமைய பாராளுமன்ற செயற்குழு ஒன்றை நியமிக்க முடியும்.



பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் பாராளுமன்ற செயற்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவார்கள். பரிந்துரைகளை அனைவரும் ஒன்றிணைந்து தயாரிக்கலாம்.


சட்டங்களை திருத்தம் செய்ய ஒன்றிணைந்து செயற்படலாம்.இதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.ஏனெனில் ஜனாதிபதி ஆணைக்குழுவை காட்டிலும் பாராளுமன்ற செயற்குழுவை அமைப்பது  வெளிப்படைத்தன்மையானதாக அமையும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »