சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், தாம் எதிர்கொண்ட நெருக்கடியின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் குறித்து அமைச்சரொருவரிடம் தெரிவித்திருந்ததாகவும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரர் கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ‘ஒன்பது மணி ஐந்து’ (நமயை பஹ) என்ற நூல் வெளியிடப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்த ஆனந்தசிறி தேரர், தனது தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த சூழலில், தமக்காகத் தலையிட்டு உதவுமாறு முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் ஞானசார தேரர் மிகவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பில் காணப்பட்ட நடைமுறைத் தவறுகள் காரணமாகவே இத்தகைய நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக ஞானசார தேரர் கருதியிருந்தார். இதனால் அவர் கடுமையான அதிர்ச்சிக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகியிருந்ததாகவும் ஆனந்தசிறி தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய கையெழுத்துச் சேகரிப்பு நடவடிக்கை குறித்தும் ஆனந்தசிறி தேரர் கருத்துத் தெரிவித்தார்.
மகியங்கனைப் பகுதியில் உள்ள ஒரு விகாரையில் இருந்தே சுமார் 10,000 கையெழுத்துகள் கிடைத்துள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பல விகாரைகளிலிருந்து கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கும் விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியைக் கருத்திற்கொண்டு ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரதன மகாநாயக்கர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகா சங்கத்தினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு: குற்றச்சாட்டு
இதற்கிடையில், சமூக ஊடகங்கள் ஊடாக மகா சங்கத்தினரை இலக்குவைத்து திட்டமிட்ட வகையில் அவதூறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆனந்தசிறி தேரர் குற்றஞ்சாட்டினார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பிக்குகள், நட்சத்திர அந்தஸ்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் அவர் கடுமையாக நிராகரித்தார்.
புத்தபெருமான் பிச்சைக்காரர் அல்லர் என்றும், அவர் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரச குடும்பத்திலிருந்து துறவறம் பூண்ட உன்னதமானவர் என்றும் ஆனந்தசிறி தேரர் தெரிவித்தார்.
புத்தபெருமானின் சீடர்களான மகா சங்கத்தினருக்கு அரச மாளிகைகளிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தங்குவதற்கான பாரம்பரிய உரிமையும் கௌரவமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பௌத்தர்களாகப் பிறப்புச் சான்றிதழில் மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலர், பிக்குகள் நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்வதைப் பெரும் வியப்பாகக் கருதி, அவர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களைப் பரப்புவதாகவும் ஆனந்தசிறி தேரர் விமர்சித்தார்.
