வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாக, வட மாகாண பனை வடிசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (07) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், அண்மையில் அதிகரிக்கப்பட்ட மதுவரி மற்றும் பல்வேறு கட்டணங்களால் சிறிய அளவிலான பனை வடிசாலைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சில கட்டணங்கள் 50,000 ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல வடிசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் பெருமளவில் சேகரிக்கப்படும் பனையிலிருந்து பெறப்படும் கள்ளு உள்ளிட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்த முடியாமல் வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பனைத் தொழில் வட மாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரியத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
பெரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் பாரம்பரிய முறையில் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபடும் பனை வடிசாலைகளுக்கும் ஒரே வகையான வரி மற்றும் கட்டண முறையை நடைமுறைப்படுத்துவது நியாயமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தற்போதைய வரி மற்றும் கட்டண அதிகரிப்புகள் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்ததுடன், இத்துறையைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகள் மற்றும் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய வரித் திணைக்கள அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருடன் விசேட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்போது நடைமுறையில் உள்ள மதுவரி, உற்பத்திக் கட்டணம், பாதுகாப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய கட்டணங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, பனைசார் உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் பனை வளத்தைப் பாதுகாப்பதுடன், அதனை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையை தொடர்ந்து முன்னெடுத்து, உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
