(செ.கவிஷனா)
கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தற்போதைய அரசாங்கமும் அடக்குமுறையை தேர்ந்தெடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளமையால் நாட்டின் பொருளாதார நெருக்கடியும் பொருமக்களின் மீதான சுமைகள் தொடர்ச்சியான சுமத்தப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக பணவீக்கமும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிணங்க எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலையிலும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிக்கும் வேளையில் அஸ்வெசும நலன்புரி உதவிகளை பெற்றுவந்த இலட்சக்கணக்காண மக்களை அரசாங்கம் அந்நலன்புரி பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வறுமை அதிகரித்துள்ள சூழலில் அஸ்ஙவெசும பயனாளிகளின் எண்ணிக்கையை எவ்வாறு இவ்வளவு பெருமளவில் குறைத்தது.
அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார திட்டங்களால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காத நிலையில் விலை அதிகரிப்பு மற்றும் உரிமைக்காக மக்கள் எதிர்வரும் மாதங்களில் வீதிக்கும் இறங்கிப் போராடுவார்கள் என்பதை உணர்ந்தே அரசாங்கம் அடக்கு முறையைக் கையில் எடுத்துள்ளது.
மக்கள் மத்தியில் எழும் கடுமையாக எதிர்பபை அடக்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச்சட்ட மூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான ஆபத்தான சட்டமூலங்களை கொண்டுவர முயற்சிக்கிறது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத ஆட்சியாளர்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்காக வரலாற்கு ரீதியாகப் பயன்படுத்தும் அடக்குமுறை வழியையே தற்போதைய அரசாங்கமும் தேர்ந்தெடுத்துள்ளது.
அத்துடன் தொழில்சார் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கூட இந்த புதிய சட்டமூலங்களின் கீழ் பயங்கரவாதம் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தொழிற்சங்கள் அச்சமடைந்துள்ளன. இச்சட்டமூலங்கள் தொழிற்சங்களுக்கு மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அச்சுறுத்தலாகவும் அடக்குமுறையாகவும் அமையும் என்றார்.
