இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 20,799 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்றாவதாக கண்டி மாவட்டத்தில் 8,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் நாட்டில் 29,964 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.
அத்துடன், நவம்பர் மாதத்தின் இதுவரையிலான கடந்த சில நாட்களில் மட்டும் 1,577 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நிலவும் மழை உடனான வானிலை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றைப் பிரகடனப்படுத்தவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில் இருக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
