Our Feeds


Thursday, November 5, 2026

ShortNews

மக்கள் மீது மேலதிக வரிச்சுமை எதனையும் சுமத்தவில்லை - அனில் ஜயந்த!


தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது தேவையற்ற வரிகளை விதிக்கவில்லை எனவும், மாறாக தற்போதுள்ள வரி அமைப்பில் காணப்பட்ட பலவீனங்களைச் சீர்செய்து, அதனை மேலும் நியாயமானதாகவும் சீரானதாகவும் மாற்றியமைத்துள்ளது எனவும் தொழிற்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தன்னிச்சையாக பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று புதன்கிழமை (4) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தியாவசிய பொதுச் சேவைகள், இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், தேசிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளைச் சீராகப் பராமரித்து முன்னோக்கிச் செல்வதற்கு வரி வருவாயே மிக முக்கியமான நிதி ஆதாரமாக விளங்குகின்றது எனச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு வரி வருமானம் அவசியமாகிறது.

ஜனாதிபதி அளித்த உறுதியளிப்புக்கு அமைவாக, தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் மீது எந்தவொரு கூடுதல் வரிச்சுமையையும் திணிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வரி வசூல் மற்றும் வரி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த செயற்றிறனை அதிகரிக்கவும், மக்கள் வரி செலுத்துவதற்கான ஊக்கத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் காத்திரமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதன் நேரடிப் பயனாக நாட்டின் வரி செலுத்துவோரின் எல்லை (வரி அடிப்படை) கணிசமாக விரிவடைந்துள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவிலான வரி வருவாயை வெற்றிகரமாக வசூலிக்க முடிந்திருப்பதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »