Our Feeds


Tuesday, November 3, 2026

Zameera

2026 மகா போகச் செய்கை: எல்நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி

 



2026 மகா போகச் செய்கையின் போது எல்நினோ (El Nino) காலநிலைத் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி, சீரற்ற மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்களை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.


இன்று (3) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிடம் முன்வைத்த கேள்விகளின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இதன்போது, விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு முழுமையான பங்களிப்பை வழங்கிவரும் ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்த அவர், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் 2026 மகா போகச் செய்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.


எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இம்முறை வறட்சி மற்றும் சீரற்ற மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கும் தேசிய உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.


குறிப்பாக, மகா போகச் செய்கைக்குத் தேவையான யூரியா, TSP, MOP உள்ளிட்ட உர வகைகள் போதியளவில் கையிருப்பில் உள்ளனவா என்றும், சந்தையில் உரத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைத் தடுத்து, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நியாயமான விலையில் அல்லது மானிய அடிப்படையில் உரம் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


அத்துடன், எல்நினோ வறட்சித் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நீர்நிலை முகாமைத்துவம் மற்றும் குளங்களைப் புனரமைத்தல் தொடர்பில் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சுகள் இணைந்து முன்னெடுத்துள்ள அவசரத் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.


அதேவேளை, அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்களால் விவசாய நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் விவசாயக் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கம் கோரினார்.


மேலும், எல்நினோ காலநிலை மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வும் பயிர்ச்செய்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளும் அடிமட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பொறுப்பாளர்களைச் சென்றடைந்துள்ளனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


காலநிலை மாற்றங்களால் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் ஊடாக இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் அரசாங்கத்திடம் அவர் வினவினார்.


விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »