Our Feeds


Wednesday, November 4, 2026

ShortNews

போதைப்பொருள் தொடர்பில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!


போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தவறுகள் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொலிஸுக்குள் தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கும், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 233 சிறுமிகள் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐஸ் பக்கெட்டுகள், பொம்பே மிட்டாய் மற்றும் சாரவிட்ட போன்ற பொருட்களின் ஊடாக போதைப்பொருள் வழங்கும் சம்பவங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதுடன், அவற்றைத் தடுப்பதற்குப் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தை, பேச்சு மற்றும் நட்பு வட்டாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

"தற்போது சில பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருட்களுடன் தொடர்புடையவர்களாக மாறியுள்ளனர். இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர்களில் பெரும்பான்மையானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். அத்துடன், பல்வேறு தவறுகள் காரணமாக சுமார் 1,500 அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே பொலிஸார் மீது நம்பிக்கை வையுங்கள். எங்களுக்குள் தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த நபர்கள் இல்லை என்று கூற முடியாது. அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை அகற்றுவதற்கும், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தாய் அல்லது தந்தை இதைக் கேட்டுக்கொண்டிருந்தால், உங்கள் மகள் அல்லது மகனின் நடத்தை, பேச்சு மற்றும் தொடர்புகளில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பிள்ளை முன்பு சாப்பிட்டது போல் இப்போது சாப்பிடவில்லை என்றால், முன்பு தாய் தந்தை சொல்வதைக் கேட்டதை விட வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்றால், முன்பு பழகிய நண்பர்களுக்குப் பதிலாக வேறு நண்பர்களுடன் பழகுகிறார் என்றால், அந்த மாற்றங்கள் குறித்து பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 233 சிறுமிகளும் அடங்குகின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் ஒரு சூழ்நிலையாகும்.

பேஸ்புக் பார்ட்டிகள் (Facebook parties) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை அண்மித்து, 'ஐஸ்' பக்கெட்டுகள், பொம்பே மிட்டாய் மற்றும் சாரவிட்ட போன்ற பொருட்களின் ஊடாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் உள்ளன. தற்போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்." என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »