இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் இலக்குடன், அமெரிக்காவின் 34 தன்னார்வலர்கள் அடங்கிய மாபெரும் குழுவினர் தங்களது இரண்டு வருட சேவையை இலங்கையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 17) நடைபெற்ற இவர்களின் பதவியேற்பு விழாவில், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் எரிக் மேயர் மற்றும் கல்வி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இத்திட்டம் இலங்கையில் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ஒரே தடவையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப்பெரிய அமெரிக்கத் தன்னார்வலர் குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்பறை கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் ஊடாக மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தல். இலங்கை ஆசிரியர்களுடன் இணைந்து நின்று கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல். கல்வி ஒத்துழைப்பு மற்றும் மக்கள் இடையேயான பிணைப்பை பலப்படுத்துதல்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வளர்ப்பதில் கல்வியும் மக்கள் தொடர்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், "இராஜதந்திர உறவுகள் எப்போதும் பேச்சுவார்த்தை மேசையில் தொடங்குவதில்லை; சில சமயங்களில் அவை வகுப்பறையில் உள்ள மேசையில்கூட தொடங்கலாம்" எனச் சிறப்பித்துக் கூறினார்.
இலங்கைக்கான அமைதிப்படைத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெஃப்ரி கோவிய உள்ளிட்ட குழுவினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதி அமைச்சர், இந்தத் திட்டம் இரு நாடுகளுக்குமிடையிலான கலாசாரப் பரிமாற்றத்தையும் கல்விப் பங்களிப்பையும் மேலும் விரிவுபடுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
