Our Feeds


Thursday, November 19, 2026

Zameera

ஆனந்த பாலிதவின் கைது – சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் முறைப்பாடு செய்யத் திட்டம்!

 

(க.சிவலிங்கமூர்த்தி)


ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க செயற்பாட்டாளரும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கத் தலைவருமான ஆனந்த பாலிதவின் கைது தொழிற்சங்கங்களை ஒடுக்கும் அரசியல் நடவடிக்கையின் ஒரு கட்டமாகும். இதற்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.தீவுகள் ஆராயுங்கள்


தேசிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


ஆனந்த பாலிதவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு கைது செய்து, ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எனினும், இது அரசியல் ரீதியான தொழிற்சங்க ஒடுக்குமுறையாகும்.


ஆனந்த பாலித அச்சமின்றி ஊழல், மோசடிகள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புகளை வெளிப்படுத்திய தொழிற்சங்கத் தலைவராவார். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அவருக்கு எதிராகவே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சுமார் 31 இலட்சம் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக அவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் தேசிய ஊழியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மனிதவள முகாமைத்துவப் பிரிவினால் தொழிற்சங்க அலுவலகத்துக்கான அனுமதியும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிர்வாக அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளன.


ஆனந்த பாலித தனிப்பட்ட முறையில் பணத்தைக் கோரவில்லை. கொடுப்பனவுகளில் தவறு இடம்பெற்றிருந்தால் அதனை அங்கீகரித்த அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும். தவறான கொடுப்பனவுகளை மீள அறவிடுவதற்கான நிர்வாக நடைமுறைகளும் உள்ளன. எனவே, கொடுப்பனவைப் பெற்றவரை மாத்திரம் கைது செய்வது அரசியல் தலையீட்டுடனான நடவடிக்கையாகும்.



அரசாங்கம் தொழிற்சங்கங்களின் வருடாந்த அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமை உள்ளிட்ட நிர்வாகத் தடைகளையும் ஏற்படுத்துகின்றது. தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சட்டங்களைப் பயன்படுத்தக்கூடாது.


நீதிமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினம் ஆனந்த பாலிதவுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகின்றோம்.


தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் மீண்டும் முறைப்பாடு செய்யவுள்ளோம். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடமும் முறைப்பாடுகளை முன்வைக்கவுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிட நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »