கல்முனை மாநகர சபை - சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் எல்லை நிர்ணய குழு ஒன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்குள் எல்லை நிர்ணய பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித காலவரையறையும் குறிப்பிடப்படவில்லை. இதுபாரியதொரு குறைப்பாடாகும். கல்முனை மாநகர சபை மற்றும் சாந்தமருது நகர சபை தேர்தலுக்கு நாங்கள் தயார், அரசாங்கம் தயாரா என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் சவால் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வரவு செலவுத் திட்ட முன்மொழிவானது மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதியாகின்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கைகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவது மட்டுமன்றி மத்திய கிழக்கில் நீண்ட காலமாக இலங்கைக்கு உதவி வந்த ஈரான் போன்ற நட்பு நாடுகளின் நலன்களை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம் என்பதனை மறந்துவிடக் கூடாது.
அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து இஸ்ரேலின் சியோனிச அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்கு சாதமான நிலைப்பாட்டை இலங்கை எடுக்குமாக இருந்தால் அது எமது நீண்டகால அணிசேரா கொள்கை மற்றும் சுயாதீன வெளிநாட்டு கொள்கைக்கும் முரணாக அமையும். அத்துடன் இத்தகைய நிலைப்பாடு அண்டைய நாடான இந்தியாவுடனான பிராந்திய தொடர்புகளுக்கும் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இலங்கையின் பொருளாதார வர்த்தகத்தையும் பாதிக்கும். பல துறைகளில் இதன் தாக்கம் ஏற்படுத்தலாம்.
இந்த பாவச் செயலுக்கு நாமும் பங்காளிகள் ஆகின்றோம். ஒரு வல்லரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை துணை போவது சர்வதேச சட்டங்களுக்கும் முரணான இராணுவ நடவடிக்கைக்கு இலங்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் என்பதுடன், சர்வதேச சட்ட பொறுப்பு கூறலுக்கும் கேள்விகளுக்கு நாங்கள் உள்ளாகலாம். எனவே இலங்கை எந்தவொரு வல்லரசுக்கும் அடிபணியாமல் வெளிநாட்டு கொள்கை, சர்வதேச சட்ட கோட்பாடுகளுக்குள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்முனை நகரில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் குறைந்தபட்சம் 65,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் '15 நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் கல்முனைப் பகுதிக்கு வெறும் 5,000 மில்லியன் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்முனை மக்களுக்கு இது பாரியதொரு அநீதியாகும். அரசாங்கத்தின் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கை முற்றாகச் சிதைந்துவிட்டது. இது பற்றி அரசாங்கத்திற்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால், இதன் உண்மையான பிரதிபலனை அரசாங்கம் வெகு விரைவில் எதிர்கொள்ள நேரிடும்.
வெகு விரைவில் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், அரசாங்கம் தயாராக உள்ளதா? சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதைப் பற்றி ஆராய வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானியின் பிரகாரம் அறிவிக்கப்பட்ட சாய்ந்தமருது நகரசபை தற்போது சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிச் சுமார் ஆறு மாதங்கள் கடந்ததன் பின்னர், பொதுநிர்வாக அமைச்சு அது தொடர்பில் மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக எல்லை நிர்ணயக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதமே அறிவித்திருந்தது. தற்போது வர்த்தமானி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ள போதிலும்,அதில் பாரிய ஒரு தவறு இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கை நிறைவேற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், வர்த்தமானியில் அவ்வாறான கால வரையறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் எல்லை நிர்ணயக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், அரசாங்கம் இதற்கு எந்த அளவில் தயாராக உள்ளது? சாய்ந்தமருதில் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய நகர சபைக்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பதைக் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மட்டுமே அரசாங்கத்தின் உண்மையான நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். நாங்கள் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளோம், அரசாங்கம் தயாராக உள்ளதா? தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் நிலை எதுவென்பதை தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.
