Our Feeds


Thursday, November 19, 2026

Zameera

பிரதமருக்கும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல்

 

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீலகாந்த் மிஸ்ரா அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.


 


உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் உறவை எடுத்துரைத்ததுடன், உலக வங்கி இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுக்காகத் தமது நன்றியையும் தெரிவித்தார்.


 


இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், எதிர்கொள்ளப்படும் பிரதான சவால்கள் ஆகியன குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


 


நல்லாட்சிக் கோட்பாடுகளுக்கு இணங்க, டிஜிட்டல்மயமாக்கலையும் நிறுவனக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.


 


பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் தனியார் துறையின் வகிபாகம் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனியார் துறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.


 


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, நிலைபேறான வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதுடன், பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »