Our Feeds


Sunday, November 1, 2026

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் கடமை என்பது சட்டத்தைக் காண்பித்து மக்களை அச்சமூட்டுவது அல்ல. மாறாக மக்களைப் பாதுகாப்பதே ஆகும்.

 


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவது அனைவரினதும் கடமை என்றும், ஆனால் சாதாரண மக்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கும் வகையிலான சட்டங்களை இயற்றுவதற்கு அது ஒரு காரணமாக முடியாது என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவது ஒரு கடமையாகும் என்றும், ஆனால் சாதாரண மக்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கும் வகையிலான சட்டங்களை இயற்றுவதற்கு அது ஒரு காரணமாக முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இவ்வாறான வலுவான சட்டங்களைப் பொறுத்தமட்டில், அவற்றுக்கான ஸ்திரமான பாதுகாப்பு, பொறுப்புக்கூறத்தக்க வகையிலான அமுலாக்கம் மற்றும் ஆக்கபூர்வமான நீதித்துறை மேற்பார்வை என்பன அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அதேவேளை இச்சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தீவிர கரிசனைகள் முறையான பதில் வழங்குவதற்குத் தகுதியானவை என்றும், அரசாங்கம் அவற்றை செவிமடுத்து, கலந்தாலோசித்து, சட்டமூலம் குறித்து மறுபரிசீலனை மேற்கொள்ளவேண்டும் என்றும் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

'சட்டங்களை இயற்றுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். இன்று அவர்கள் அரசுக்கு வழங்கும் அதிகாரங்கள், நாளை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படக்கூடும். அரசாங்கத்தின் கடமை என்பது சட்டத்தைக் காண்பித்து மக்களை அச்சமூட்டுவது அல்ல. மாறாக மக்களைப் பாதுகாப்பதே ஆகும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »