Our Feeds


Tuesday, November 17, 2026

SHAHNI RAMEES

ஹரக்கட்டாவின் மனைவியிடம் இலஞ்சம் பெற்ற விவகாரம் சரித் அபேசிங்கவின் சொகுசு வீடு முடக்கம்!

 


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என அறியப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன எனும் ஹரக் கட்டாவுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில், சரித் அபேசிங்கவின் சொகுசு வீடொன்று முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்தது.பயண வழிகாட்டி


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று (16) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இவ்விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.


இச்சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரின் சொகுசு வீடொன்றை முடக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வழக்கு விசாரணையின் போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 2 ஆவது சந்தேகநபரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷவின் பல சொகுசு வாகனங்கள் மற்றும் 4 வங்கிக் கணக்குகளை அண்மையில் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முடக்கப்பட்டுள்ளன.



மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரான வருண ஹேந்திகே அருண சதுரங்க என்பவரின் மனைவி மற்றும் தந்தைக்குச் சொந்தமான 2 வாகனங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. 


அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.


2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் பிரகாரம் இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்ட உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவலான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள குழு தலைவர் எனவும் அறியப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன எனும் ஹரக் கட்டா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.



அதற்கமைய, இச்சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராக சரித் அபேசிங்க, 2 ஆவது சந்தேகநபராக ரகித ராஜபக்ஷ மற்றும் 3 ஆவது சந்தேகநபராக வருண ஹேந்திகே அருண சதுரங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »