Our Feeds


Tuesday, November 17, 2026

Zameera

காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு தொடர்பில் தெரிவுக்குழு அமைக்க வேண்டும் – சஜித்

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


காவன்திஸ்ஸ' யானை பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் உண்மைய கண்டறிய விசேட தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சியினால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமல் இருப்பதால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அத்துடன் கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஆராய குழு அமைக்க அரசாங்கத்தின் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,


தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை மரபுரிமையாகக் கருதப்படும் 'காவன்திஸ்ஸ' யானை 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதி துயரகரமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான உண்மைத் தகவல்களை வெளிக்கொணர்தல், சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளனரா என்பதை ஆராய்தல், எதிர்காலத்தில் இவ்வாறான துயரகரமான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காணுதல் மற்றும் யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வுகளைக் காணுதல் உள்ளிட்ட எட்டு விடயங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட பிரேரணையொன்று 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.



அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மூன்று சந்தர்ப்பங்களில் கூடியிருந்தபோதிலும், குறித்த பிரேரணை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், அதற்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட ஏனைய பிரேரணைகளுக்குக் கூட முன்னுரிமை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், காவன்திஸ்ஸ யானை உள்ளிட்ட வனஜீவராசிகள் வளங்கள் தொடர்பில் காணப்படும் தேசிய முக்கியத்துவம் மற்றும் அவசரத் தேவை குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.


மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தனது பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரிய முன்னுரிமை வழங்கி செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


அரசாங்கம் தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றாத சந்தர்ப்பங்களில், அது குறித்து கவனம் செலுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது எதிர்க்கட்சியினதும் அரசியலமைப்பு ரீதியான மற்றும் பாராளுமன்றப் பொறுப்பாகும். இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான பிரேரணையொன்று குறித்து நியாயமான காலப்பகுதிக்குள் பரிசீலித்து தீர்மானமொன்றை எடுப்பதற்குத் தவறியமையானது, வெறுமனே ஒரு தாமதமாக மாத்திரம் கருதப்படக் கூடாது.


இச்செயற்பாட்டின் காரணமாக, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான மற்றும் பாராளுமன்றப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் பங்கேற்பதற்கும் உள்ள உரிமைக்கு முறையற்ற வகையில் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது என்பதே எனது கருத்தாகும். 


அதற்கமைய, இச்செயற்பாடானது பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்றச் சிறப்புரிமைகளை மீறும் செயலாக அமையக்கூடும் என்பதுடன், அச்சட்டத்தினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.


ஆகவே, மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, இம்முறையீட்டை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தி, தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »