தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சட்டவிரோத போதைப்பொருட்களின் ஊடாகவே தமக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத கொள்வனவு உள்ளிட்ட தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்றே, சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுக்கும், போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் அமைப்புக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மேற்கொண்டு வருவதாகவும், அதனை தாம் முழுமையாக நிறைவேற்றுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.
சுயாதீன நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தல் விடுக்கின்றது.
- இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சவின் எண்ணம் ஈடேறுமா?
- மரண தண்டனை நிறைவேற்றும் சிறிசேனவின் முடிவுக்கு எதிராக போராட்டம்
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் தனது தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தமது நாட்டுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.a
