வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று (16) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு கடந்த 13 நிமிடங்களில் சந்திர கிரகணம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். பகுதி அளவிலான இச்சந்திர கிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனில் விழ ஆரம்பித்தது முதல் அதிலிருந்து மெதுவாக விலகும் வரை இச்சந்திர கிரகணம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இவ்வாறான ஒரு சந்திர கிரகணம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
