அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை
காரியாலயத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்
அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரான நௌபர் மௌலவியின் மகனான மொஹமட் நௌபர்
அப்துல்லாவினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனான அப்துல்லா, பந்தியன்வெவ, அரக்யால, கெகுனுகொல்ல
பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான்
ஹாஷிமினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றதுடன், தற்கொலைத் தாக்குதல் உறுதிமொழியும் எடுத்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
இவ்வாறு நுவரெலியாவுக்கு அழைத்துச்
செல்லப்பட்டபோது, முகங்கொடுத்த
அனுபவங்களை அவர் பின்வருமாறு விபரித்துள்ளார்,
சுற்றுலா செல்வதாகக் கூறியே தந்தை என்னை
நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு, ஐந்து
மௌலவிமார்கள் இருந்தனர். இரவாகும் போது சுமார் 30 பேர்
வரை வந்தனர். பின்னர் தொழுகையில் ஈடுபட்டு இரவு உணவு உட்கொண்டதனை பின்னர்
உறங்கினோம். மறுநாள் காலை பயான் பிரசங்கம் ஆரம்பமானது. சனி, ஞாயிறு இரு தினங்களில் பயான் மாத்திரமே இடம்பெற்றது.
அதன்போது, ஸஹ்ரான்
மௌலவி ஜிஹாத் அமைப்பின் அவசியம் உள்ளிட்ட பல விடயங்களை கூறினார். எமக்கு பெரிய
மற்றும் சிறிய ஆயுதங்களை காண்பித்தார். வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள் பற்றியும்
விளக்கமளித்தார். அதன்பின்னர், நாம்
உறுதிமொழி வழங்கியதன் பின்னர் அனைவருக்கும் பெயர் சூட்டப்பட்டது. எனக்கு அபூ ஹஸன்
எனப் பெயரிடப்பட்டது. ஸஹ்ரான் மௌலவி முன்னிலையிலேயே நாம் உறுதிமொழி வழங்கினோம்.
அதன்பின்னரே எமக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது என்றார்.
இதேவேளை, குண்டுவெடிப்பு
சம்பவத்தின் பின்னர் பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டதாகவும், ஆயுதப்பயிற்சி பெற்ற சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்ட முதல்
சந்தர்ப்பம் இதுவெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த
ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து, ஸஹ்ரானுடன் தொடர்பை கொண்டிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில்
நீண்ட விசாரணைகளை மேற்கொள்ளும் அதேவேளை, விசேடமாக
அடையாளம் காணப்பட்ட 28 பேர்
தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றகர அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேக நபரான நௌபர் மௌலவியும் தற்போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்டட அமைப்புகளான தேசிய தௌஹீத்
ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 பேர் கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்
கைதுசெய்யப்பட்டனர். அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை பிரிவு மற்றும் அம்பாறை
பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவலுக்கமைய, மேற்படி 16 வயதான
சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
09 மாகாணங்களிலும் குண்டுத்தாக்குதல்
நடத்துவதற்கு நௌபர் மௌலவி என்பவர் திட்டமிட்டிருந்ததாகவும், அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் குறித்த தாக்குதல்கள்
முறியடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாஅத்
அமைப்பின் தலைவரான மொஹமட் ஸஹ்ரானின் பிரசங்கங்களில் பங்கேற்று ஆயுத பயிற்சிகளை
பெற்றதாகக் கூறப்படும் 28 பேர்
தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினர் விசேட விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
