இக்காலத்தில் நாம் சாதரணமாக காண்கிற ஒன்றுதான் எலக்ரோனிக் சாதனங்களான (TV, Computer, laptop, Tablets ,Mobile Phones போன்ற screen devices) உடனான குழந்தைகளின் தொடர்பு. ஒரு நாளில் அதில் செலவழிக்கும் நேரத்தின் அளவு, அதற்காக வேண்டி வீட்டிலும், வெளியிலும் நடைபெறும் தொடர்ச்சியான சண்டைகள், வாதங்கள். இவைகள் இன்று சர்வசாதாரணமாக நடப்பவைகளாக ஆகிவிட்டன. இவ்வாறான ஒரு நிலைக்கு முதலும் முழுக் காரணமாக பெற்றோர்களே காணப்படுகின்றனர். சில பெற்றோர்கள் நவீனம் , முன்னேற்றம் , இலத்திரினியல் நூற்றாண்டுத் தகவல் பரிமாற்றம் என்ற சிந்தனையில் தமது குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முந்துவதற்கான யுக்திகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் இதனை அனுமதிக்கின்றனர். இன்னும் பலர் வெளியே ஒப்புக்கொள்ளக் கூச்சப்பட்டாலும், மின் கைத்தொடர்புச்சாதனங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் , அவர்களை ஓரிடத்தில் உட்கார வைப்பதற்கும், உணவு ஊட்டுவதற்கும் நல்ல ஒரு சாதனம் என நினைக்கின்றனர். மற்றைய ஒரு சாரார் வசதியுள்ளவர்கள், ஏனைய அயலவர் நண்பர்களின் பிள்ளைகள் வைத்திருக்கிறார்களே என்று தமது பிள்ளைகளின் தொந்தரவினால் மனம் இளகி மின்நுகர் உபகரணங்களை வாங்கி கொடுக்கின்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்களில் யாருமே இதனால் ஏற்படும் தீமைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் மிகவும் கவலையளிக்கின்ற யதார்த்தமாக இருக்கிறது.
எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் உபகரணங்கள் நிச்சயமாக பல வழிகளில் நம் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன. என்றாலும் இவைகள் குழந்தைகளுக்கு உகந்த பொருட்கள் இல்லை என்பதைத் தான் இன்றைய நவீன ஆராய்ச்சிகளும் மருத்துவ ஆய்வுகளும் சொல்கின்றன. ஏனெனில் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன. குழந்தைகள், இளம் வயதினர், மற்றும் இளைஞர்கள் இந்த திரைகள் முன்னால் (screen devices )அதிக நேரம் செலவழிக்கும்போது (screen time) அவர்களை சுற்றி ஆரோக்கியம், கிரகித்தல், புத்திக்கூர்மை, சமூகமயமாதல், பேச்சுத் திறன் போன்றவற்றின் பல பகுதிகள் எதிர்மறையாக பாதிக்கபடுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இது குறித்து அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமானதாக இருக்கின்றது. இவைகளால் ஏற்படுகின்ற தீமைகளையும் எதிர்மறையான விளைவுகளையும் நாம் தெரிந்துகொள்கின்ற போதுதான் இதிலிருந்து நமது குழந்தைச் செல்வங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.
எலக்ட்ரானிக் சாதனங்களினால் குழந்தைகளுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை அறிவதற்கு முன் மனித மூளை பற்றிய சில அடிப்படைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சி எப்படி நடைபெறுகின்றது?
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் மாசுபடுத்தபடாத களங்கமில்லாத நல்ல மூளையுடன் தான் பிறக்கின்றன. பிறந்ததில் இருந்து தங்களது முதல் இரண்டு, மூன்று வயது வரை பெற்றுக்கொள்கின்ற தூண்டுதல்களையும், அனுபவங்களையும் வைத்து தான் ஒவ்வொரு குழந்தையும் தங்களது விருத்தி திறனையும், புத்திக் கூர்மையையும் பெற்று கொள்கின்றன. அதுவே அவர்கள் பிற்காலத்தில் எப்படிப்பட்டவர்கள் என்பதை தீர்மானிப்பதற்கான அடித்தளமாக அமைகின்றது. இந்த அடிப்படை மூளை வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரிடம் அல்லது தாம் வாழும் சூழலிலிடம் இருந்து பெறுகின்ற தொடுகை , மற்றுமுண்டான ஐம்புலன்களின் தூண்டலிலேயே முற்றிலுமாக தங்கியிருக்கின்றது. இவைகள் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பெரும் கணிசமான பங்களிப்பை செலுத்துகின்ற காரணிகள். சூழலிலிருந்து பெறுகின்ற தொடுகை, ஸ்பரிசம், பார்க்கின்ற பார்வை, கேட்கின்ற பேச்சு அதுபோல காண்கின்ற முகங்கள், முகபாவனைகள் எல்லாமே மூளையின் நரம்பு மண்டலத்தின் உள்ளே சென்று அதன் கட்டமைப்பை ஒழுங்கு படுத்துகின்ற தூண்டி களாக இருக்கின்றன. மனிதனின் சமூகத் தொடர்பாடல் நுட்பங்களை விருத்தி செய்கின்ற ஊக்கிகளாக அமைகின்றன . அதாவது Formation of Synapses எனும் அடிப்படை தொழிற்பாட்டை செய்கின்றவைகள் இவைகளாகவே இருக்கின்றன. மூளையின் விருத்திக்கு அடிப்படையாக அமைகின்ற காரணிகள் இவைகள் தான். இந்த தொடுகைகள் , ஸ்பரிசங்கள் , கட்டியணைப்புக்கள், முத்தங்கள் தான் நம்மிடம் அவர்கள் எதிர்பார்க்கும் தூண்டல்கள். பொருட்களின் முப்பரிமாணங்கள் அதன் தன்மைகள், (Soft ,Hard ,Smooth ,Rouugh, Hot , Cold, Solid, Liquid )அது தரும் தொடுகை உணர்ச்சிகள் (Touch Sensation ) போன்றன குழந்தைகள் கட்டாயம் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியவைகளாக இருக்கின்றன. இந்த தொடு உணர்ச்சியை , இந்த முப்பரிமாண தன்மையை, இந்த முகபாவங்களை , இந்த உணர்ச்சி வெளிப்பாடுகளை, இந்த சிரிப்பை, புன்னகையை, அழுகையை , அன்பை , பாசத்தை, கவலையை , இத்தியாதி இத்தியாதி இப்படியான மனித உணர்வுகளை கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. துரதிஷ்டவசமாக இந்த உணர்ச்சிகளை இன்னும் ஒரு மனிதனால் மாத்திரமே கொடுக்க முடியுமாக இருப்பதுதான் இங்கே உள்ள சிக்கல். குழந்தைகள் நிச்சயமாக இவைகளை மனிதனிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் நீங்கள் ஆசையுடன் வழங்குகின்ற, அள்ளிக் கொடுக்கின்ற இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் இந்த உணர்ச்சிகளை ஒருக்காலும் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்போவதில்லை என்பதை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வளர்கின்ற பிஞ்சு மூளை இது பற்றி எந்த அறிவும் இல்லாமல் வளர்ந்து விடுவது தான் இங்கே உள்ள ஆபத்தின் அடிநாதமாக இருக்கின்றது.
பிறப்பு மற்றும் மூன்று வயதிற்கு இடையில் நடைபெறும் விரைவான மூளை வளர்ச்சியினால், குறிப்பாக இக்காலப்பகுதி சுற்றியுள்ள சூழலுக்கு உணர்திறன் மிக்கதாக கானப்படுகிறது. ஏனென்றால் இந்த முதல் மென்மையான ஆண்டுகளில் மூளையில் நடக்கும் மாற்றங்கள் தான் பிற்கால நிரந்தர அடித்தளத்துக்கான காரணிகளாக மாறுகின்றன. இதன் பின்னரான அனைத்து மூளை செயல்பாடுகளும் அதன் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகின்றன.
மூளையின் நரம்பியல் நெட்வொர்க்குகள் முக்கியமான காலக்கட்டத்தில் சாதாரணமாக வளர்வதற்கு குழந்தைக்கு வெளிப்புற சூழலில் இருந்து மேற் குறிப்பிட்ட தூண்டுதல் கிடைப்பது தொடர்ச்சியாக தேவைப்படுகிறது.இந்த தூண்டுதல்கள் தான் பல நூற்றாண்டுகளாக, சந்ததி சந்ததியாக மனித பரிணாம வளர்ச்சியைப் முன் கொண்டு சென்ற அடிப்படை அம்சமாக இருக்கிறது. ஆனால் என்ன ஆச்சர்யம் இந்த இன்றியமையாத தூண்டுதல்கள் சடுதியாக இல்லாமல் ஆக்கப்படுவது தான் இந்த தொடுதிரைகள் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் பயங்கரமானது.
இன்றைய தொடு திரைகளில் touch screenகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் இந்த புலனுனர்வுகள் இல்லை என்ற பயங்கரத்தை "நவீன பெற்றோர்கள்" யாருக்கும் விளங்கியதாக தெரியவில்லை. ஒரு இளம் குழந்தை ஒரு திரையின் முன்னால் நேரம் செலவழிக்கும்போது , உண்மையான உலகிலிருந்து தேவையான தூண்டுதல்களைப் பெறாமல் போகிறது என்பதும்,குழந்தையின் மானுட மூளை வளர்ச்சி குறைந்துவிடும் என்பதும் இதன் மூலம் அக்குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதும் வெளிப்படையான உண்மைகள். இந்த முக்கியமான ஆரம்ப வருடங்களில் சேதம் ஏற்பட்டால், அதன் விளைவுகள் எப்போதும நிரந்தரமானது என்பதும் நிதர்சனமான உண்மையாகும். நாம் விரும்பியபோதும் விரும்பியவாறு செய்வதற்கு வாழ்க்கை என்பது ஓன் அல்லது ஓஃப் சுவிட்ச் கிடையாது.
மூளை விருத்தியில் ஏற்படும் தாக்கத்திற்கு மேலதிகமாக வேறு வகையான பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எலக்ட்ரானிக் சாதனப் பயன்பாடு மற்றும் தூக்க சிக்கல்கள் ஆகியவற்றுக்கிடையேயான நேரடி தொடர்பை பலரும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இச்சாதனங்களின் அதிகப் பயன்பாடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தூக்கத்தை எதிர்மறையாக பாதிக்கின்றது. இரவில் தூங்குவதற்கு கடினமாகி, இரவில் நீண்ட உறக்கமின்மையை ஏற்படுத்துகிறது. பொதுவில் தரமான ஆழமான தூக்கத்தை (Deep REM Sleep) இது தடை செய்துவிடுகிறது.. இந்த சாதனங்கள் வெளியிடுகிற நீல நிற ஒளிக்கற்றைகள் மூளைக்கான சமிக்ஞைகளை பகல்நேரமாக நினைக்கும் தந்திரத்தை செய்கிறது. இதனால் ஏற்படும் தூக்கமின்மை பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிரச்சனைக்குரியது. ஏனெனில் அவர்களின் வளர்ச்சி, ஞாபக சக்தி, நோய் எதிர்ப்பு திறன், பழுதடைந்த உடல் கலங்களை திருத்துதல், புற்று நோய் தடுப்பு போன்ற இன்னோரன்ன ஹோர்மோன்களின், நொதியங்களின் செயற்பாடுகள் இந்த ஆழ் தூக்க நிலையில் மட்டுமே நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதனால் பிந்தைய இரவில் தூங்குவதற்குப் போராடுகிற நிலை ஏற்படுகிறது. இந்தப் போராட்டம் , இரவுநேர குறுக்கீடுகள் என்பன குழந்தைகளின் மனநிலை, நடத்தை, கவனம், மற்றும் அடுத்த நாள் விழிப்பு நிலை என அனைத்து அம்சங்களிலும் மிகவும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது . காலப்போக்கில் இது போன்ற தூக்கமின்மை உடல் ரீதியான மற்றும் மனநல பிரச்சினைகள் விளைவிக்கும் கடுமையான நோயாகவே மாறிவிடுகிறது.
மன நல பிரச்சினைகள்.
பெரும்பாலான குழந்தைகள் விரைவாக உணரமுடியாதபடி திரை நேரத்திலிருந்து மீளமுடியாத அடியாகவே மாறிவிடுகின்றனர். இது மோசமான மனநிலையை, அதிக கவலையை, அதிக எரிச்சலூட்டும் தன்மையை, மற்றும் எதிர் மறை நடத்தைக்கு இட்டுச்செல்லும் நிலையை ஏற்படுத்துகிறது. பல ஆராய்ச்சி ஆய்வுகள் குழந்தைகளின் மின்னணு சாதனங்களின் பயன்பாடு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றின் இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்துள்ளன. அதன் முடிவுகளும் தெளிவாக உள்ளன. இந்த சாதனங்களின் அதிகரித்த பயன்பாடு மன அழுத்தம், மனச்சோர்வு Depression ,பதட்டம், கவனமின்மை , பிடிவாதம் , Attention Deficit hyperactivity (ADHD) , ஆட்டிசம் (Autism ), போன்ற மனநிலை கோளாறுகள் மற்றும் உடற்கூற்றியல் உள்ளிட்ட மனநல பிறள்வுகள் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது, எதிர்காலத்தில் உளவியல் துன்பம் மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகவும் இந்த டச் ஸ்கிரீன் பாவனை அடையாளப்படுத்தபட்டுள்ளது .
இது பற்றி பெற்றோர் எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் பிரக்ஞையற்று இருப்பதால் இப்ப்பாரிய பிரச்சினை விவாதிக்கப்படாமலே சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளை பற்றி உரையாடுவதற்கு அனைத்து பெற்றோர்களும் உந்துதல் பெற வேண்டும்.
உடல் நல சிக்கல்கள்.
இன்சுலின் செயலிழப்பு , உடல் பருமன், வயிற்று கொழுப்பு அதிகரிப்பு, மற்றும் வகை 2 டயபடீஸ் போன்ற அதிக ஆபத்துள் நோய்கள் உள்ளிட்ட பலவிதமான பல்வேறு சுகாதார சிக்கல்களுக்கு முக்கிய காரணம் மின்னணு சாதனங்கள் முன்னால் அதிக நேரம் செலவழிக்கப்படுகின்றமையே என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் திரை நேரத்தை screen time அதிகரிக்கும் போது உருவாகிறது. குழந்தைகள் மிகவும் உற்சாகம் இழந்து குறைவாக நகர்கின்றனர், ஆனால் அதிக உணவை சாப்பிடுகிறனர். இது ஆரோக்கியமானதல்ல. உட்கார்ந்து செலவழிக்கின்ற ஒவ்வொரு மணித்துளியும் இடை அதிகரிப்பு, தசை வளர்ச்சி இல்லாமை, மற்றும் உடல் உபாதைகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. உடல் இயக்கம் இல்லாததால் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது . இறுதியில் உடல் திறன் ஒருங்கிணைப்பிலிருந்து சமூக திறனுடன் தொடர்பு கொள்ளல் போன்ற எல்லாவற்றிற்கும் தேவையான மூளை இணைப்புகளை இல்லாமலே போய் விடுகின்றது.
பார்வை சிக்கல்கள்
அதிக நேரம் குழந்தைகள் திரைகள் பார்க்கும் போது கண் மற்றும் பார்வை தொடர்பான பல பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உருவாகிறது. உலர் கண் நோய்(Dry eye), குறும்பார்வை(Short sight) போன்ற பல பிரச்சினை சிறு வயதில் ஏற்பட இது காரணமாகிவிடுகிறது. எழுத்து பழகுதல், வெட்டுதல், விளையாட்டு நடவடிக்கைகள், மற்றும் மிகவும் நூதன பார்வை செயற்பாடுகள்( fine moter development) மற்றும் உடல் திறன்கள் ஒருங்கிணைப்பு (coordination) சம்பந்தப்பட்ட வேறு பல பார்வை சார் பிரச்சினைகள் ஏற்படுவதும் இதனாலேயே. இதனால் குழந்தைகள் வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடுதல் கடினமான ஒன்றாகவும் மாறி விடுகிறது .
சமூகமயமாதலில் ஏற்படும் பிரச்சினைகள்
குறைவான உறவுகள் Poor Relationship , தொடர்பு சிக்கல்கள் Poor Communication , மற்றும் சமூகத் தொடர்புறல் இல்லாமை Social Isolation, உறவுகளை ஒன்றிணைக்க மறுத்தல் , நண்பர்கள் இல்லாமை, பேச்சு மொழி இல்லாமல் போதல் என்பனவற்றை ஊக்குவிக்கும் கருவியாக இந்த சாதனங்களே காணப்படுகிறன .அது தவிர வன்முறை வீடியோ விளையாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் போன்றவை வெளிப்படையாக குழந்தைகளை இன்னும் அதிகமாக ஆக்ரோஷமான நடத்தைகள் உள்ளவர்களாக, வன்முறையான முன்னோக்கு-திறன்களைக் கொண்டவர்களாக, மற்றும் ஒழுக்க விழுமியங்கள் குறைந்தவர்களாக மாற்றி அமைக்கின்றது .இந்த தொழில்நுட்ப பயன்பாடு மற்றவர்களுடன் எவ்வாறு புழங்குவது என்பது பற்றிய குழந்தைகளின் புரிதலை எதிர்மறையாக அழித்துவிடுகிறது . சிந்தனை திறன், விமர்சன சிந்தனை, பிரதிபலிப்பு மற்றும் கற்பனை போன்ற மனிதப் பண்புகள் மழுங்கடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகவும் இது அமைந்தது விடுகிறது. ஏமாற்றமளிக்கும் நிலைகளில் சகிப்புத்தன்மையைக் கைக்கொள்ளல், விடாமுயற்சி அல்லது சிக்கல் மிக்க நிலைகளை சமாளித்தல் , போட்டி சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் ,எடுத்த காரியத்தை முடித்தல் போன்ற மனித பண்புகளை இல்லாமல் செய்து விடுகிறது. அதிகமான திரை நேரம் தரமான குடும்ப நேரத்தை (family time ) குறைப்பதற்கு வழிவகுக்கிறது, இது தீவிர பெற்றோர் குழந்தை மோதல்கள் அதிகரிப்பதற்கு ஏதுவான காரணியாகவும் இருக்கிறது.
எலக்ட்ரானிக் சாதனங்களின் மிகை உபயோகம் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று ஏற்கனவே நீங்கள் நம்பவில்லை என்றால், இந்த தகவலானது உங்கள் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். இதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக வருங்கால சந்ததிகளை பாதுகாப்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாக அமெரிக்க சிறுவர் நிபுணர்கள் குழு மற்றும் கனேடிய வைத்தியர்கள் குழு போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறான எலெக்ட்ரானிக் உபகரணங்களை எப்பொழுது பாவிக்க கொடுக்கலாம் என்பதற்கான வரையறைகளை மற்றும் அது சார்ந்த பல்வேறு நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் முக்கியமாக அவர்கள் சொல்ல வருகின்ற விஷயம் குழந்தைகளை இவ்வாறான கொடிய தீமையிலிருந்து பாதுகாப்பது பற்றியதுதான். குழந்தைகளுக்கு மிகச் சிறுவயதிலேயே இவ்வாறான எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுப்பதை முற்றாகத் தவிர்த்தல் மிகவும் நன்மை பயக்கும். அது கார்ட்டூனாக அல்லது ரைம்ஸ் எனப்படும் பாடல்களாக அல்லது வீடியோக்களாக அல்லது விளையாட்டு உபகரணங்களாக அல்லது ஏன் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை கொண்டதாக இருந்தாலும் இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்கள் எதையும் கொடுக்கக்கூடாது என்பதே அவர்களது முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் இவைகளை கொடுத்தல் கூடாது. இரண்டு வயதுக்கும் 6 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு 20 நிமிடம் மாத்திரமே கொடுக்க வேண்டுமென்ற அனுமதியும் அவர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த இருபது நிமிடம் என்பது ரிவீ பார்த்தல், வீடியோ கேம் விளையாடுதல் ,செல் போன்களை நோன்டுதல் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அந்த 20 நிமிடங்கள் காணப்படுகின்றது . அதுபோல 6 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு அதிகூடியது இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்களை கொடுக்கவேண்டும் என்ற அறிவுரையும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே பெற்றோர்களும் மற்றைய உற்றார் உறவினர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்துவது இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மின் கைச்சாதனங்களினால் உண்டாகும் பாதகங்கள் உடன் உணர முடியாதவை. எப்படி ஒருகாலத்தில் புகையிலை, சிகரெட் பிடிப்பதும் அதனால் அருகாமையில் உள்ள பிள்ளைகளின் சுவாசக் கால்வாயில் ஏற்படும் பாதகங்களும் உணராமல் இருந்தனவோ அதுபோலத்தான் இவைகளும். ஆனால் இதன் பிரதி விளைவுகளை இன்று நாம் தெளிவாக அறிந்து அதனை முடிந்தளவு தவிர்க்கவே பார்க்கிறோம். அதே போலவே மின் கைச்சாதனங்களையும் அதனைச் சிறுவர்கள் உபயோகித்தலையும் தணித்து அவர்களை ஆரோக்கியமாக வளர வைப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக இருக்கிறது.
Dr PM.Arshath Ahamed MBBS MD PEAD
விஷேட குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை/நிந்தவூர்
