ஜனாதிபதித் தேர்லுக்கான வேட்பாளர் தெரிவு சூடு பிடித்துள்ளதால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பழைய அரசியல் வியூகங்களை விடுத்து
காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய தந்திரோபாயம் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என
அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய உறுதியான பாதுகாப்பையும்
இருப்பையும் கவனத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
உயிர்த்த ஞாயிறு சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை
முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம்களுடைய தனித்துவ ரீதியிலான
கலாசார விடயங்களை அவமதித்தல், பள்ளிவாசல் தாக்குதல்கள், வர்த்தக
நிலையங்கள் வீடுகள் என சேதத்துக்குள்ளாக்குதல், அரசியல்
ரீதியாக பலமிழக்கச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு ரீதியான இனவன்முறைகள் முஸ்லிம்கள்
மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் முஸ்லிம்
அரசியல் தலைமைத்துவங்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும்
அநீதிகள் அனைத்துக்கும் ஒரு விடை காண்பதற்கான காலம் மிக நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அதுவே ஜனாதிபதித் தேர்தல் ஆகும்.
