படகு ஒன்றில் செல்லும்போது தமிழகம் தூத்துக்குடியில்
கைதுசெய்யப்பட்ட மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அஹ்ம்மத் ஆதீப் தூத்துக்குடி
வந்து சில தினங்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இலங்கைக்குத் தப்பி வர
திட்டமிட்டிருந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது .
இதற்குத் தூத்துக்குடியில் உள்ள சிலர் உதவ
சம்மதித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் சென்று அந்த வழியாக
இலங்கைக்குள் ஊடுவும் திட்டத்தைத் தமிழக கடலோரக் காவல்படையினர்
முறியடித்திருக்கிறார்கள்.
இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுவெடிப்புச்
சம்பவம் நடைபெற்ற நிலையில், மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி இங்கு வர
திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்கு ஐ எஸ் தீவிரவாத அமைப்பினருடன்
தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்திய மத்திய உளவுப்படையினர் தீவிரமாக
ஆராய்ந்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பில் என்.ஐ.ஏ
தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ்
தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தையடுத்து இந்திய தேசிய
புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவின்
கொச்சி நகரில் சில மாதங்களுக்கு முன்பு 6 இளைஞர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக ஒகஸ்ட் 2-ம்
தேதி அபு பஷிர் என்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஷாலி முகமது என்பவரையும்
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபான் அப்துல்லா என்பவரையும் என்.ஐ.ஏ
அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த பின்னணியில் மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி இலங்கை
வர திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன்
தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது. தூத்துக்குடி, கொச்சி
துறைமுகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்
நிலையில்முன்னாள் துணை ஜனாதிபதி ஆதீப் தூத்துக்குடி வழியாகத் தமிழகத்துக்குள்
ஊடுருவ முயன்ற சம்பவம் இந்திய மத்திய உளவுத்துறையினரை அதிர்ச்சி அடைய
வைத்திருக்கிறது.
அதனால், தூத்துக்குடியில்
அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த நபர்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
