Our Feeds


Tuesday, August 20, 2019

www.shortnews.lk

கடன் சுமையினால் இலங்கை திரும்ப முடியாத குடும்பம் - கல்ப் நியுஸ் தகவல்

 


அதிக கடன் சுமையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்பில் வெளிநாட்டு ஊடகமான ‘gulf news’ செய்தி வெளியிட்டுள்ளது.
மொஹமட் பெராட் அப்பாஸ் என்ற நபரும் அவரது மனைவியான இஷாரா விஜேதுங்க மற்றும் 5, 6 வயதுகளையுடைய அவர்களது பிள்ளைகள் இருவருமே இவ்வாறு துபாயில் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மொஹமட் பெராட் அப்பாஸ் குறித்த ஊடகத்துக்கு தெரிவிக்கையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் துபாயிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் 2016 ஆம் ஆண்டு தொழிலை இழந்தேன்.
இந்நிலையில், அதே ஆண்டில் எனது மனைவி இஷாரா, சிரட்டைக் கரிகளை உரமாக்கும் தொழிலை ஆரம்பித்தார். எனக்கும் வேறு எந்தத் தொழிலும் கிடைக்காததால் நானும் அவருடன் இணைந்துகொண்டேன்.

இதற்காக நாம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்காகப் பணம் செலுத்தினோம். எனினும், ஏற்றுமதியாளர்கள் எம்மிடம் காண்பித்த மாதிரிகளை காட்டிலும் தரம் குறைந்த சரக்குகளை வழங்கியிருந்ததால் அவை நிராகரிக்கப்பட்டன. நாம் வர்த்தகத்துக்காக வாங்கிய கடன்களை மீள செலுத்துவதற்காக சேமிப்பிலிருந்த பணம் முழுவதையும் செலுத்தினோம்.

இந்நிலையில், எனது மனைவியின் வர்த்தகம் 2017 ஆம் ஆண்டில் வங்குரோத்தானது. தனது கடன் தவணைகளை செலுத்தத் தவறியதால் 10 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கான வாடகையாக 52 ஆயிரம் திர்ஹாம் செலுத்த வேண்டிய நிலுவையாக உள்ளது. இதற்காக அவருக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகளுடன் மீண்டும் இலங்கை வருவதாயின் அவர் 52 ஆயிரம் திர்ஹாம் நிலுவையிலுள்ள வாடகைப் பணத்தை செலுத்த வேண்டும் அத்துடன் எம் அனைவரதும் விசா அனுமதிப்பத்திரமும் தற்போது காலாவதியாகியுள்ளன.
பெற்றோரினது கடன் சுமையின் காரணமாக பாடசாலை கல்வியை இழந்துள்ள பிள்ளைகள் இருவரும் தமது குடும்ப நண்பர் ஒரவரால் வழங்கப்பட்ட சிறிய அறை ஒன்றில் வசித்துவரும் நிலையில் எந்தவித வருமானமும் இன்றி கடனை மீள செலுத்துவதிலும், துபாயில் தங்கியிருப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பெராட் அப்பாஸ் குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்நாட்டிலுள்ள இலங்கையர் நலன்புரி சங்கத்தின் முகாமையாளர் அல்பர்ட் ஜோர்ஜ் ஹெட்டிஆரச்சி குறித்த ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், அப்பாஸும் அவரது குடும்பத்தினரும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். அவருக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு நாம் முயற்சிக்கிறோம். அத்துடன் அவர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை செய்துகொடுப்பதற்கு தமது சங்கம் தயாராக உள்ளது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »