உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன. நீர்கொழும்பு, குருநாகல், மினுவங்கொட ஆகிய ஊர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
அலுத்கம முதல் குருநாகல் வரை முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போதும் முறையான நஷ்டஈடுகள் இதுவரை கிடைக்காத நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் வெறுப்பு இன்னும் சில பகுதிகளில் பரவலாக்கப்பட்டு வருகிறது.
புத்தளம் மாவட்டம் ஆணமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஒரேயொரு முஸ்லிம் கிராமம் சங்கட்டிக்குளம். ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலை ஏனைய பகுதிகளில் நீங்கினாலும் சங்கட்டிக்குளம் பகுதியில் இதுவரை பதற்றம் தொடர்ந்தே வருகிறது.
இரவு நேரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்களை அழிக்க முனையும் காரியங்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இது வரை முஸ்லிம்களின் 03 ஆட்டோக்கள் இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை என்பதுடன், எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்பட வில்லை.
இரவு நேரங்களில் இனந்தெரியாத கும்பல்கள் சங்கட்டிக் குளம் ஊரை சுற்றி வருகிற காரணத்தினால் அங்குள்ள முஸ்லிம்கள் இன்றும் பயத்துடன் இரவு நேரத்தை கழிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட வில்லையென அவ்வூர் வாசிகள் அங்கலாய்க்கின்றனர்.
இரவு நேர பாதுகாப்புக்காக உள்ளுர் இளைஞர்கள் இரவு நேரங்களில் கண் விழித்து காவல் இருந்து வருகிறார்கள்.
ஊரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களை வைத்திருப்போர் கூட பாதுகாப்பற்ற நிலை கருதி அவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு சரியான உரிய பாதுகாப்பான தீர்வொன்றை பெற்றுத் தர வேண்டும் என அவ்வூர்வாசிகள் முஸ்லிம் தலைமைகளை வேண்டி நிற்கின்றனர்.
இன்ஸாப் கரீம்.
