Our Feeds


Thursday, September 19, 2019

www.shortnews.lk

ஸஹ்ரான் குழுவின் வட்ஸ்அப், வைபர் தகவல்கள் CID யிடம்.

 



உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்களை   ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விசேட வலையமைப்பு ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ள வட்ஸ் அப், வைபர் மற்றும் டெலிகிராம் தகவல்களை சி.ஐ.டி. பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வதேச பொலிஸார் மற்றும் சர்வதேச விசாரணை அமைப்புக்களின் உதவியுடன் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதன் ஊடாக பயங்கரவாதிகளின் ஏனைய திட்டங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் கோட்டை நீதிவானுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க இதனை நீதிவானுக்கு விசேட அறிக்கை ஊடாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகக் கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர் அஹமது மொஹமது அர்ஷாத்தின் விளக்கமறியலை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீதிவான் நீடித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் விவகார விசாரணைகளின்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அஹமது முஹம்மது அர்ஷாத் எனும் குறித்த சந்தேக நபர், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமா அத் உறுப்பினர் பஸ்ஹுல் ஸஹ்ரான் எனும் சந்தேக நபரின் ஆலோசனைக்கு அமைய , இந்தத் தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்பின் தாக்குதலாக சித்திரிக்க, யாரும் ஊடறுத்து கேட்க முடியாத விசேட வலையமைப்பு ஒன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரைக் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் காத்தான்குடி பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் கையளித்தனர். அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் விசேட வலையமைப்பு ஊடாக ஐஎஸ். அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »