Our Feeds


Saturday, May 2, 2026

SHAHNI RAMEES

மும்பை: பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி சாப்பிட்டதால் இறக்கவில்லை!

 



மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்

உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழம் சாப்பிட்டதே காரணம் என பரவி வந்த செய்திகள் பொய்யானவை என புதிய தடயவியல் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மும்பையைச் சேர்ந்த தொலைபேசி உபகரண விற்பனையாளரான அப்துல்லா டோகாடியா (45), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்களான ஜைனப் (13), ஆயிஷா (16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் உணவு அருந்திய பின்னர், அதிகாலை 1:00 மணியளவில் இக்குடும்பத்தினர் தர்பூசணி பழத்தை உட்கொண்டுள்ளனர். அதிகாலை 5:00 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, சில மணிநேரங்களிலேயே அனைவரும் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாதாரண உணவு நஞ்சாவதால் இவ்வாறான மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


குடும்பத் தலைவரான அப்துல்லாவின் உடலில் 'மோர்ஃபின்' எனப்படும் வீரியம் மிக்க வலிநிவாரணி மருந்து இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


தர்பூசணி பழத்தால்தான் மரணம் நிகழ்ந்தது என பரவிய செய்தியால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்பூசணி விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.


அன்றைய இரவு அவர்களுடன் உணவு அருந்திய ஏனைய 05 உறவினர்களுக்கும் எவ்வித உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை. பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.


தர்பூசணி பழத்திற்கும் இந்த மரணங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இந்திய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இறுதி மருத்துவ அறிக்கை வெளிவரும் வரை மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மும்பை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.      

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »