ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெயரை மாற்றி வேறு ஒரு அணியின்
கீழ் களமிறங்கும் யோசனை கொண்ட கடிதம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச
தரப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் அல்லாமல்
கதிரை சின்னத்தில் களமிறங்கலாமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர
காரியவசம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தாமரை மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித்
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியிருப்பதால் சட்டப்பிரச்சினை ஒன்று உருவாகும்
சாத்தியம் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கட்டுப்பணம்
செலுத்திய பின்னர் சின்னத்தை மாற்ற முடியுமென சட்டத்தில் இருந்தால் அதன்படி
செயற்பட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாரெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் – சட்டப்
பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்று ஆலோசனைகளை நடத்தி அதன் பின் பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டமைப்பு என்ற பொது அணியின்
கீழ் போட்டியிடுவதற்கு தயாரென்றும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் அந்த கடிதத்தில்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த புதிய நிலவரங்கள் குறித்து ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம் பிக்கள் இன்று அல்லது நாளை
கூடி ஆராயவுள்ளனர்.
