எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் என்னவகையான
முடிவை எடுக்கவேண்டுமென்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்த விசேட பிரதிநிதிகள் குழுவொன்று
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருகிறது.
மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கருத்துருவாக்கிகள் ,அரசியல்
பத்தி எழுத்தாளர்கள் கொண்ட குழுவே வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தி பேச்சு
நடத்த இவ்வாறு கொழும்பு வருகிறது.நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட
இந்தக் குழு இன்று கொழும்பில் குறித்த சந்திப்பை நடத்தவுள்ளது.
முன்னதாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய
அரசியல் பத்தி எழுத்தாளர்கள் , அரசியல்
கருத்துருவாக்கிகள் மற்றும் புத்திஜீவிகள் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து
ஆராய்ந்தனர்.
தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும்
எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ள நிலையில் – மக்கள்
விடுதலை முன்னணியின் வேட்பாளரும் சாதகமான பிரதிபலிப்பை இதுவிடயத்தில் வெளியிடாத
நிலையில் தமிழர் சுயாதிபத்தியம் – தமிழர்
தேசத்தின் நலன் உட்பட்ட விடயங்களை தமிழர் அரசியல் தரப்புகளுடன் பேச இங்கு
தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிரகாரம் இன்று சம்பந்தனை சந்திக்கவுள்ள இந்த
பிரதிநிதிகள் குழு தமிழரின் இந்த நெடுங்கால பிரச்சினைகளை உலகுக்கு மீண்டும்
வலியுறுத்தவும் – சிங்கள தேசத்திற்கும் சிங்கள தலைவர்களுக்கும் தமிழரின்
நிலைப்பாட்டை சொல்லும் வகையில் தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க
சம்பந்தனை வலியுறுத்தவுள்ளது.
அதேசமயம் சம்பந்தன் அதற்கு இணங்காத பட்சத்தில் வரும்
ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரித்து ஒட்டுமொத்த தமிழினத்தின் நிலைப்பாட்டையும்
வெளிப்படுத்துவதா என்பது பற்றிய ஆலோசனையையும் இந்த குழு முன்வைக்கவுள்ளதாக
அறியமுடிந்தது.
இன்று காலை 11 மணிக்கு
இந்த சந்திப்பு சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் ஆரம்பமாகவுள்ளது.
