உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்
தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் ஸஹ்ரான் எனும் பயங்கரவாதியின்
புகைப்படத்தைப் பெற்று உளவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க, குண்டுத் தாக்குதல் நடத்தப்பட 10 நாட்களுக்கு முன்பு ( ஏப்ரல் 11 ஆம் திகதி) தனது பொறுப்பின் கீழ் இருந்த பொலிஸ் பிரதானிகளுக்கு
உரிய அறிவுறுத்தல்கள் எழுத்து மூலம் வழங்கப்பட்டதாக, தாக்குதல் இடம்பெறும் போது கொழும்புக்கு பொறுப்பாக
இருந்தவரும் தற்போது தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடர்பிலான
பிரதிப் பொலிஸ் மா அதிபருமான லலித் ஷெல்டன் பத்திநாயக்க சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 2 ஆவது நாளாக நடைபெற்ற நிலையில் 2 ஆவது சாட்சியாளராகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க சாட்சியமளித்தார்.
இதன்போது, 2019.04.11 ஆம் திகதி கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க அனுப்பிய உளவுத் தகவல் அடங்கிய விஷேட கடிதம் மற்றும் அதே திகதியில் அப்போது கொழும்பின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த அஜித் ரோஹன தனக்கு கீழ் இருந்த உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய விஷேட ஆலோசனை கடிதம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் மேற்படி சாட்சி யத்தை அளித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வு பெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் அவர் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
நேற்று முன்தினம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான சஞ்ஜீவ திஸாநாயக்க, சுஹர்ஷி ஹேரத், அரச சட்டவாதிகளான கே.டி. சம்பத் மற்றும் ஹரீந்ர ஜயசிங்க ஆகியோர் ஆணைக்குழுவில் பிரசன்னமாகி யிருந்த நிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் மேற்பார்வையில், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகர்ஷி ஹேரத் சாட்சியை நெறிப்படுத்தினார்.
இதன்போது, சாட்சியாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க சார்பில் மது ஜயதிலக மற்றும் ஷெஹான் டி சில்வா ஆகியோர் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தனர்.
அவரது சாட்சிகளின் பிரகாரம்’ 2016 மே மாதம் முதல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நான் சேவையாற்றினேன். எனக்கு கீழ் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் வலயங்களும் மோசடி தடுப்புப் பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, குதிரைப் படைப் பிரிவு மற்றும் கடல் பிரிவு ஆகியனவும் இருந்தன. 2019 மார்ச் ஆகும் போது கடல் பிரிவு பிறிதொரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டு செல்லப்பட்டது.
2019 ஏப்ரலாகும் போது, எனது அதிகாரத்தின் கீழ் இருந்த கொழும்பு வடக்குக்கு பொறுப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டாரவும், கொழும்பு மத்திக்கு பொறுப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவும், கொழும்பு தெற்குக்கு பொறுப்பாக பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவும் செயற்பட்டதுடன் மோசடி தடுப்புப் பிரிவு பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் பிரேமரத்னவும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்தவும் குதிரைப் படைப் பிரிவு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜேசிறியும் கடமையாற்றினர்.
ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடமை என்ன என்பது தொடர்பில் 1928 ஆம் ஆண்டின் பொலிஸ் வர்த்தமானி மற்றும் 2009 ஆம் ஆண்டின் பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம் ஊடாக சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தேவையான உயர் திட்டங்களை வகுத்தல், அமுல் செய்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தல், மனித வளம் மற்றும் பெளதீக வளங்களை முகாமை செய்தல், கையாளல் மற்றும் சமூக பொலிஸ் பிரிவை பலப்படுத்தல் போன்றன ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிகளாகும்.’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க அறிமுக சாட்சியத்தை பதிவு செய்தார்.
அதன் பிறகு அவர் வழங்கிய சாட்சியம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலுடன் சுருக்கமாக வருமாறு;பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: இந்த விசாரணைகள் 21/4 அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீரா?
லலித் பத்திநாயக்க: ஆம் அறிவேன்.பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: இந்தத் தாக்குதல் தொடர்பில் தாக்குதலுக்கு முன்னர் உங்களுக்கு எப்போது தகவல் கிடைத்தது?லலித் பத்திநாயக்க: தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தகவல் கிடைத்தது 20.04.2019 அன்று.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: தனிப்பட்ட ரீதியிலன்று உத்தியோகபூர்வமாக முதல் தகவல் எப்போது கிடைத்தது?
லலித் பத்திநாயக்க: 11.04.2019 அன்று மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஊடாக முதல் தகவல் கிடைத்தது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண தெற்கு, வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியிருந்த விஷேட கடிதத்துடன் கூடிய ஆவணங்கள் ஊடாக அந்த தகவல் அறியத்தரப்பட்டிருந்தது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்த ச்மயம் நீங்கள் கடமையில் இருந்தீர்களா?லலித் பத்திநாயக்க: இல்லை. நான் விடுமுறையில் கொழும்புக்கு வெளியே இருந்தேன்.பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அவ்வாறெனில் உங்கள் கடமைகளை செய்ய பதிலாக நியமிக்கப்ப்ட்டிருந்தவர் யார்?லலித் பத்திநாயக்க: அப்போது போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிச் மா அதிபராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவே பதில் கடமைகளுக்காக நியமிக்கப்ப்ட்டிருந்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் கடிதம், ஆவணங்கள் கிடைத்ததாக பதிவுகள் உள்ளதா?லலித் பத்திநாயக்க: ஆம், 11/4 அன்று கிடைத்துள்ளதாக உறுதியாகிறது.
( அந்த கடிதத்தை ஆணைக்குழு முன் காண்பிக்கின்றார். அது 08.04.2019 ஆம் திகதியிடப்பட்ட கடிதம். அது சீ – 4 என சாட்சியாக ஆவணப்படுத்தப்பட்டது)பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்தக் கடிதம் எந்த முறையில் அனுப்பப்பட்டது?
லலித் பத்திநாயக்க: உறுதியாக தெரிய. பொலிஸ் தகவல் பரிமாற்றப்படும் வீ.பி.என். வலையமைப்பு ஊடாகவோ, தொகை நகல் ஊடாகவோ, நேரடியாகவோ கிடைத்திருக்கலாம்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: உங்களது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?லலித் பத்திநாயக்க: இலக்கம் 331, ஒல்கொட் மாவத்தை புறக்கோட்டைபிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?லலித் பத்திநாயக்க: கோட்டை, பொலிஸ் தலைமையகத்தில்பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடிதத்துக்கு அமைவாக உமது கடமைகளை முன்னெடுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன செயற்பட்டிருந்தாரா?
லலித் பத்திநாயக்க: ஆம், அவர் அன்றைய தினமே அந்த தகவல்கள் தொடர்பில் செயற்பட தேவையான உத்தரவுகளை விடுத்திருந்தார். டி.ஐ.ஜி./ சி.ஓ./பி.ஏ/144 எனும் இலக்கத்தின் கீழ் அவர் அந்த உத்தரவுகளை வழங்கியிருந்தார்.
11/04/2019 ஆம் திகதியிடப்பட்டு மிக முக்கியமானது என குறிப்பிட்டு அவரது ஆலோசனை, உத்தரவுகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் வரும் பொலிஸ் வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் பனிப்பாளர்களுக்கும், மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
அவர் அனுப்பியிருந்த கடிதத்தில், தற்கொலை தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கு அமைவானது என தலைப்பிடப்பட்டிருந்தது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: உங்களின் கீழா மேல் மாகாண உளவுத்துறை நிர்வகிக்கப்படுகின்றது?லலித் பத்திநாயக்க: இல்லை, அது நேரடியாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரிவு.பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அப்படியானால் ஏன் மேல் மாகாண உளவுப் பிரிவுக்கு அந்த கடிதத்தை அனுப்பினீர்கள்?
லலித் பத்திநாயக்க: கொழும்பின் பொலிஸ் நிலையங்களில் தனியாக உளவுப் பிரிவு கிடையாது. மேல் மாகாண உளவுத் துறை ஊடாகவே அவர்கள் தகவல்களைப் பெற்றனர். எனவே தான் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது தலையீடு செய்த ஆணைக் குழுவின் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் உளவுப் பிரிவு ஒனடறை ஸ்தாபித்து முன்னெடுக்க 2014 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு தொடர்பில் நீங்கள் அறிவீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, ஆம், எனினும் கொழும்பு பொலிஸ் நிலையங்களில் அவ்வாறான நடைமுறையொன்று இருக்கவில்லை. அதனை முன்னெடுக்க ஆளணியும் பற்றாக்குறையாகவே இருந்தது. எனவே, மேல் மாகாண உளவுத் துறை ஊடாகவே கொழும்பு பொலிஸ் நிலையங்களின் உளவுத் தகவல்களுக்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டது. அத்துடன் தேசிய உளவுத் துறை மற்றும் விஷேட நடவடிக்கை பிரிவிடமிருந்தும் தகவல்கள் பெறப்படும்.
இதன்போது, ஆணையாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ரஜபக்ஷ ,சாதாரணமாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கூட உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறி நீதிமன்றங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்து தடை உத்தரவோ அல்லது நிபந்தனைகளையோ பெறுவீர்கள்… ஏன் இந்த விடயத்தில் இப்படியான உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக நீதிமன்றுக்கு கூட அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தாக்குதல் நடத்தப்படலாம் என்றே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடிதத்துடன் கூடிய அறிக்கையில் இருந்தது. அதில் குறிப்பிட்ட தினமோ, இடமோ, உறுதியாக கூறப்பட்டிருக்கவில்லை. உறுதியான உளவுத் தகவல் இல்லாது நீதிமன்றுக்கு சென்று அறிக்கையிட முடியாது. எனப் பதிலளித்தார்.பொறுப்பின் கீழ் இருந்த பொலிஸ் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
