Our Feeds


Wednesday, November 13, 2019

www.shortnews.lk

சஜித்தோ, கோத்தாவோ சமூகத்தை காப்பாற்றப் போவதில்லை, அல்லாஹ் மட்டுமே காப்பாற்றுவான் - இறுதி பிரச்சார கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ்

 


இந்த சமூகத்தை சஜித் பிரேமதாசவோ, அல்லது கோத்தாபய ராஜபக்ஷவோ ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை. நம்மை அல்லாஹ் மட்டுமே காப்பாற்றுவான். கடந்த மஹிந்த அரசிலும் நாம் அடிவாங்கினோம். அதே போல் மைத்திரி - ரனில் அரசாங்கத்திலும் நாம் அடிவாங்கினோம். தொடர்ந்தும் அடிவாங்கும் சமூகமாகவே நாம் இருக்கிறோம். என இன்று (13) காத்தான்குடியில் நடைபெற்ற தனது இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளராகவே நான் களமிறங்கியுள்ளேன். இந்த சமூகத்தின் விடிவுக்காக, இந்த சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க உங்கள் 1வது வாக்கை ஒட்டக சின்னத்திற்கு நேராக 1 என இடுங்கள். 2வது தெரிவை நீங்கள் விரும்பியவருக்கு வழங்குங்கள். அது கோத்தாவாக இருந்தாலும் பரவாயில்லை, சஜித்தாக இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால், யார் வெற்றிபெருவதென்றாலும் ஒட்டக சின்னத்திற்கு கிடைத்த முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார்கள் என்ற நிலையை நாம் உண்டாக்க வேண்டும்.

முஸ்லிம்களின் அனைத்து  பிரச்சினைகளையும் தொகுத்து “நமது கனவு” எனும் தலைப்பில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிட்டுள்ளேன். இலங்கை வரலாற்றில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வெளியிட்ட முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் இதுதான். இதில் நமது அனைத்து பிரச்சினைகளையும் குறிப்பிட்டு அதற்கு என்னால் நான் ஆதரிக்கும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுத் தர முடியுமான தீர்வுகளையும் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு முடியாத எதனையும் நான் அதில் குறிப்பிட வில்லை.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்ற ஹக்கீம், ரிஷாத் போன்றவர்கள் “முஸ்லிம்” என்றொரு வார்த்தை கூட இல்லாத சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

சஜித் பிரேமதாசவினதும், கோத்தாவினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்துப் பாருங்கள். நான் முழுமையாக படித்துப் பார்த்தேன் சஜித்தின் விஞ்ஞாபனத்தில் மலையக தமிழர்களை பற்றி 4 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். வடகிழக்கு தமிழர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம்களை பற்றி “முஸ்லிம்” என்றொரு வார்த்தை கூட இல்லை.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாத விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு தலையில் வைத்து கொண்டாடுகின்றவர்கள், முழுக்க முழுக்க முஸ்லிம்களை பற்றியே எழுதப்பட்டுள்ள எனது விஞ்ஞாபனத்தை நிராகரிப்பது நியாயமா?

“நமது கனவு” என்கின்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாட்டில் உள்ள சுமார் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரம் முஸ்லிம்களின் வீடுகளுக்கும் தபாலில் அனுப்பி வைத்து விட்டேன். அனைத்து வீடுகளுக்கும் போய் சேர்ந்து விட்டது. அதனை முஸ்லிம்கள் படித்துப் பாருங்கள். அதில் இருக்கும் விபரங்கள் இந்த சமூகத்தை பற்றியது மாத்திரமே.

எனது விஞ்ஞாபனத்தை நிராகரிப்போர் அல்லாஹ்விடம் மறுமையில் பதில் சொல்லிக் கொள்ளுங்கள். நான் என் கடமையை முடித்து விட்டேன். இந்த சமுதாயத்தை பாதுகாக்கும் கடமை உங்களிடம் தான் விடப்பட்டுள்ளது.

இந்த சமூகத்திற்கு விடிவு கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் வாக்குகளை 1வது வாக்கை ஒட்டக சின்னத்திற்கு வழங்கி விட்டு 2வது இலக்கத்தை நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வழங்கி இந்த சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் பணியில் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.

-ஷோர்ட் நியுஸ் கள செய்தியாளர்கள்



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »