தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக நேற்று (09) அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாலசிங்கம் முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார் .
அன்று நாங்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை செய்துக்கொண்டிருந்தோம் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய சமூகம் அனாதைகளாக இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்களாகிய நாங்கள் உரிமையை வேறு சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கின்றோம்.
கடந்த காலத்திலிருந்து நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவதாக வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்று கிழக்கை பொறுத்த வரையில் எமது தமிழ் சமூகம் வேலை வாய்ப்பின்மை ,பொருளாதார பல மின்மை போன்ற பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வாகரையில் தமிழரசுக்கட்சி இயங்க ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழர் கட்சி செயலாளர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணி செயலாளர் பதவிகள் வகித்து வருகின்றேன். இந்த நிலையில் எங்களைப் பொறுத்த வரையில் எந்த விதமான அபிவிருத்தியும் இதுவரை இங்கு இடம் பெறவில்லை.
இன்று எமது பிரதேச பெண்கள் கிண்ணியா போன்ற பிரதேசத்திற்கு ஆடைத் தொழிற்சாலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள் இதைப் பற்றி சிந்திப்பதற்கு யாரும் இல்லை. இது சம்பந்தமான தீர்க்கமான முடிவும் இதுவரைக்கும் இல்லை
இன்றும் வாகரை பிரதேசத்தில் தமிழர்களுடைய காணிகள் அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. காணிகள் பறிபோன பின்னர் உரிமையை பெற்று என்ன செய்ய முடியும் எனவே எங்களுடைய சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும்
எனவே எனது இந்த அரசியல் உரிமை அடிப்படையில் நான் சுதந்திரமாக முடிவெடுத்திருக்கிறேன் பொதுஜன பெரமுனை கட்சி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக இதற்கு பிற்பாடு தமிழரசு கட்சி என்மீது நடவடிக்கை எடுத்தால் எனக்கு கட்சி சார்ந்து அரசியல் சார்ந்து செய்யப்படுவதற்கு கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையான் அவர்களுக்கு எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.
கிழக்கை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்கும் என்பதனை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொள்கின்றேன். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்து ஒரு மாணவன் நான் அந்த வகையில் கிழக்கு பல்கலைக் கழகத்தில் என்னுடன் கற்ற சக மாணவர்கள் இன்று ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் என்னுடன் சேர்ந்து பயணிப்பதற்காக இருக்கின்றார்கள் என்றார்.
