இலங்கையில் வாழும் ஈழ தமிழக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருந்து இந்திய மத்திய அரசு இம்மியளவும் விலகக்கூடாது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில் தமிழக ஊடகங்கங்களிடம் வைகோ இதனை கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சஜித் பிரேமதேசாவுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் தமக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தையும், ஏற்பட இருக்கின்ற ஆபத்தையும் எண்ணி தங்களை பாதுகாத்துக்கொள்ள எது நல்லது என்பதைப் பற்றி தீர்மானித்தமைக்காக நனறி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், யுத்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு உகந்த தீர்வை பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, சீனாவோடும், பாகிஸ்தானோடும் உறவாடிக்கொண்டு இந்தியாவை ஏமாற்றி தமிழர்களின் பிரச்சினைகளை மூடி மறைக்க முற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.
