பாகிஸ்தானுக்கு வரும் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு அதியுட்ச பாதுகாப்பினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் பொலிஸ் மா அதிபர் மொஹமட் அமீர் சுல்பிகர்கான் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியானது இம் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ராவல்பிண்டியிலும், கராச்சியலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதவுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பொலிஸ் மா அதிபர் மொஹமட் அமீர் சுல்பிகர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப் பயணம் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு செல்லு இலங்கை கிரிக்கெட் அணிக்கான பாதுகாப்பு தொடர்பில் மறு ஆய்வு செய்யப்பட்டதுடன், இராணுவ கமாண்டோக்களை அணியின் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இலங்கை அணியினர் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஹோட்டல்களிலும், விளையாடும் மைதானங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டமும் தடைசெய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எனினும் பாகிஸ்தானின் இந்த இலங்கை அணிக்கான அதியுச்ச பாதுகாப்பு தொடர்பில் அந் நாட்டு ஊடகங்களில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
