Our Feeds


Friday, December 6, 2019

www.shortnews.lk

பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம், படுகொலை - எப்படி நடந்தது ஹைதராபாத் எண்கவுன்டர்?

 

ஹைதராபாத் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


ஹைதராபாத் அடுத்துள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றம்) கடந்த மாதம் 27-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, தொண்டுபள்ளி டோல்கேட் அருகே அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. அதைச் சரிசெய்ய உதவுவதுபோல் நடித்து நான்கு பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து அதே நாள் இரவு 2 மணியளவில் திஷாவை எரித்துக் கொலை செய்துள்ளனர்.

பெண் மருத்துவர்
பெண் மருத்துவர்

முதலில் மருத்துவர் திஷாவின் வண்டி யதேச்சையாகப் பஞ்சரானது என நினைத்திருந்த நேரத்தில், கொலை செய்த நான்கு பேரும் வண்டியைத் திட்டமிட்டு பஞ்சர் செய்தது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்தது. மேலும், மருத்துவர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொலை சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 29-ம் தேதி அவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ் வாகனம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், `கைது செய்யப்பட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் அனுபவித்த அதே வலியைக் கைது செய்யப்பட்டவர்களும் அனுபவிக்க வேண்டும் மற்றும் கைது செய்தவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொள்கிறோம்’ என்ற கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடமிருந்து பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டவர்கள் அழைத்துச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை வெளியில் அழைத்து வந்தால் பெரும் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தால் கடந்த 4-ம் தேதி சிறைக்குச் சென்ற நீதிபதி, நான்கு பேரிடமும் விசாரணை நடத்திவிட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலை ரத்துசெய்து விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

என்கவுண்டர் நடந்த இடம்
எண்கவுன்டர் நடந்த இடம்

கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையினர் வசம் வந்தவுடன் ஒரு நாள் முழுவதும் நான்கு பேரிடமும் மாறி மாறி விசாரணை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கூட்டாகவும், தனித் தனியாகவும் பல மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பாகச் சிறிய சிறிய விஷயங்களையும் காவலர்கள் சேகரித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், விசாரணைக்காகச் சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முதலில் தொண்டுபள்ளி டோல்கேட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதை நடித்துக்காட்டச் சொல்லி காவலர்கள் கேட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து மருத்துவரின் வண்டியைப் பஞ்சர் ஒட்டிய கடை, பெட்ரோல் வாங்கிய இடம், கைது செய்யப்பட்டவர்கள் மது வாங்கிய கடை ஆகிய அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அந்த நேரத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரிஃப்
ஆரிஃப்

இறுதியாக இன்று அதிகாலை 3 மணி அளவில் மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பாலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு யார் திஷாவை கொலை செய்தார் என்பது பற்றி விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆரிஃப், ஒரு காவலரின் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். உடனடியாக அலர்ட் ஆன மற்ற மூவரும் அங்கிருந்த தப்பிக்கத் தயாராகியுள்ளனர். ஆரிஃப் காவலர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்போதே மற்ற மூவரும் சம்பவ இடத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர், அவர்களைப் பார்த்து ஆரிஃப்பும் பின் தொடர்ந்து தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தப்பி ஓடிய நான்கு பேர் மீது காவல்துறையினர் என்கவுன்டர் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் என்கவுன்டர் நடந்ததாகக் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் அது தொடர்பான முழுமையான மற்றும் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தப்பி ஓடியவர்களைப் பிடிக்க முயன்றபோது 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனந்த விகடன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »