ஈரானின் மிக முக்கியமான இராணுவத் தளபதியான ஜெனரல் குவாசிம்
சுலைமானி அவரது சகாக்களும் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து மத்திய
கிழக்கில் மிகப்பெரிய போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
ஒன்றுகூடி அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல்
நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக ஈராக்கில் உள்ள சகல அமெரிக்கர்களையும் உடனடியாக
அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க – ஈரானுக்கு
இடையில் எழுந்துள்ள போர் பதற்றத்தை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையும்
சடுதியாக உயர்ந்துள்ளது.
ஜெனரல் குவாசிம் சுலைமானி 1998 ஆம் ஆண்டு
முதல் அவர் ஈரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவான குட்ஸின் தலைவராக இருந்து
வருகிறார்.
குட்ஸ் படைப்பிரிவே, வெளிநாடுகளில்
இரகசிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பல ஆயுத அமைப்புக்களுக்கும் ஆதரவு
வழங்கிவருகின்றது.
குட்ஸ் படைப்பிரிவு நேரடியாக ஈரானிய ஆன்மீகத் தலைவர்
அயதுல்லாஹ் அலி கொமைனியுடன் தொடர்பில் இருப்பதால் ஈரானை பொறுத்தவரை சுலைமானி ஒரு
கதாநாயகனாகவே கருதப்படுகின்றார்.
சுலைமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் இது குறித்து
ட்விட்டரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எந்தவித
வசனங்களையும் இடாமல் அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்திருந்தார்.
சுலைமானியின் மறைவினை அடுத்து, 3
நாட்கள் ஈரானில் தேசிய துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதாக
அறிவிக்கபட்டுள்ளது.
