கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் அதிகளவிலானோர் நேற்றைய தினமே இலங்கையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், நேற்றைய தினத்தில் மாத்திரம் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மார்ச் மாதம் 11ஆம் திகதி பதிவாகியிருந்தார். அன்றைய தினம் முதல் நேற்றைய தினம் வரையான காலம் வரை ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா தொற்றுக்குள்ளானோர் இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பதிவாகியிருந்தார்.
அன்றைய தினம் 65 கொரோனா தொற்றுக்குள்ளானோர் இலங்கையில் பதிவாகியிருந்ததுடன், அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 63 கொரோனா நோயாளிகள் பதிவாகியிருந்தனர். சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், கொரோனா தொற்றினால் இலங்கையில் மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 595 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 76 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 712 வரை அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளானோரில் அதிகளவிலானோர் குவைட் நாட்டிலிருந்து வருகைத் தந்தவர்கள் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது, இதன்படி, குவைட் நாட்டிலிருந்து வருகைத் தந்த 127 பேரும், கடற்படையைச் சேர்ந்த 8 பேரும் நேற்றைய தினத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
