Our Feeds


Friday, June 12, 2020

www.shortnews.lk

ஸஹ்ரானின் தற்கொலை தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை - ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் விசேட அறிக்கை

 

இஸ்லாமிய போதனைகளுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஆணைக்குழு முன்பான சாட்சியம் உணர்த்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திய குண்டுதாரிகள் அதற்கான 13 காரணங்களை அல்லது நியாயங்களைக் கொண்டிருந்தார்கள் என்பது தற்போது சாட்சியங்கள் மூலம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த மே மாதம் 29ம் திகதி சாட்சியம் அளிக்கையில் இவற்றை வெளியிட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிவதாகவும் சட்டத்தரணி சு​ஹைர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான அறிக்கை
உலகளாவியரீதியில் மிகவும் கண்டனத்துக்குள்ளான 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான சில காரணங்கள் முதற் தடவையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை நடத்திய குண்டுதாரிகள் அதற்கான 13 காரணங்களை அல்லது நியாயங்களைக் கொண்டிருந்தார்கள் என்பது தற்போது சாட்சியங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த மே மாதம் 29ம் திகதி சாட்சியம் அளிக்கையில் இவற்றை வெளியிட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிகின்றது.
எந்த வகையிலும் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியாக ஆக்காமல் இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை சரியாகவோ அல்லது தவறாகவோ ஊக்கப்படுத்திய காரணங்கள் எவை என்பது பற்றிய ஆய்வு மிகவும் முக்கியமான வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள காரணங்களை உணர்ச்சிவசப்படாது நேர்மையான முறையில் மதிப்பீடு செய்வது உண்மையைத் தேடும் பணியில் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்பட வேண்டும்.
மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் மனநோயின் தன்மை பற்றி ஆராய்ந்து பார்ப்பது கூட அம்மனிதனின் நல்லறிவையும் தெளிவையும் மீளப் பெறுவதில் உள்ள மிகவும் முக்கியமான ஒரு செயற்பாடாகும்.
ஊடகங்களில் பெயர் குறிப்பிடப்படாத T.I.D எனப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் ஒரு சிரேஷ்ட அதிகாரி இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நான்கு காரணங்களையும் அத்தாக்குதலை இலங்கையில் நடத்தியமைக்கான ஒன்பது மேலதிக காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காரணங்களை தான் நடத்திய விசாரணைகளின் போதும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தும் தெரிந்து கொண்டதாக அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அவர் கூறிய காரணங்கள் பின்வருமாறு: 
முதலாவது அல்லாஹ் மீது கொண்டுள்ள அன்பு, இரண்டாவது 'கிலாபத்' (இஸ்லாமிய தலைமத்துவம்) மீதான தாக்குதல் மூலம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு எதிரான பழிவாங்கல், மூன்றாவது நியூஸிலாந்து கிறிஸ்சேர்ச் நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பழிவாங்கல், நான்காவதாக இலங்கையின் சுற்றுலா ஹோட்டல்களில் தங்கியிருந்த ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் முஸ்லிம்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த நாடுகளின் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல். இவை முதல் நான்கு காரணங்களாகும்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்வைக்கப்பட்டு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் காரணங்கள் சர்வதேச ரீதியான ஊக்குவிப்புக் காரணிகள் என்பது தெளிவான விடயமாகும். முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டமையோடு இந்தக் காரணங்களுள் இரண்டு சம்பந்தப்பட்டவைகளாகும்.
இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளக் காரணமாக இருந்த மேலதிக ஒன்பது விடயங்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்வைக்கப்பட்டுள்ளவை குண்டுதாரிகளின் தொலைத்தொடர்புகள் மூலமும் விசாரணைகள் மூலமும் தெரிந்து கொள்ளப்பட்ட விடயங்களாகவே முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் ஒன்பது காரணங்களில் முதலாவதாக சொல்லப்பட்டுள்ளது 'அல்லாஹ்வை அவமதித்தல் அல்லது அவதூறு செய்தல்'. இரண்டாவது குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஒரு பன்றியின் உருவத்தை இறைவன் எனக் குறிப்பிட்டமை. மூன்றாவதாக தேரர் ஒருவர் குறிப்பிட்டதாகக் கூறப்படும் 'அல்லாஹ் ஒரு அவதாரம்' (மனிதனாகப் பிறப்பான்) என்ற கூற்று. நான்காவது முஹம்மது நபி (ஸல்) பற்றிய அவதூறான கூற்றுக்கள் வெளியிடப்பட்டமை. ஐந்தாவது வேண்டுமென்றே அல்குர்ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டமை, ஆறாவது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை. ஏழாவது முஸ்லிம்களின் வீடுகள் தீவைக்கப்பட்டமையும் அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டமையும். எட்டாவது முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச கிறிஸ்தவ சிலுவைப் போரில் இலங்கையின் பங்குபற்றல். ஓன்பதாவது இறைவிசுவாசம் அற்றவர்களை அழித்து விட நபி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுவது. இவ்வாறான ஒன்பது காரணிகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்பது காரணங்களில் எட்டுக் காரணங்கள் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயங்களோடு சம்பந்தப்படடுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. இவை 21/4 தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்று வந்த சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களினால் விளைந்தவை என்றே தெளிவாகின்றன. இது விடயத்தில் அரச இயந்திரம் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது மாத்திரமல்லாமல் சட்டத்தையும் ஒழுங்கையும் சரியான முறையில் உறுதியாக நிலைநிறுத்த அரசு தவறி விட்டது என்பது போன்ற ஒருவாதமே இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் அரசு மேலே குறிப்பிட்ட தோல்விகள் ஏற்படாமல் தனது கடமைகளை பொறுப்புடனும் உறுதியாகவும் நிலைநாட்டி இருந்தால் இந்த இளைஞர்கள் இவ்வழிக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதுவும் ஒரு முக்கிய வாதமாகும். கடந்த நிர்வாகத்தின் ஒரு அங்கமான இந்த அரசுமுறைத் தோல்விகள் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் 'குண்டுதாரிகளை உருவாக்க உதவியதா?' என்பதையும் உண்மையைத் தேடுபவர்கள் கண்டறிய வேண்டும்.
அதுமாத்திரமன்றி அன்றைய அரசின் மேலே கூறப்பட்ட தோல்விகளை மூடி மறைப்பதற்கும் இரண்டு குழு அறிக்கைகள் மூலம் இஸ்லாத்தைப் பலிக்கடாவாக்கும் கடந்த ஆட்சியின் செயற்பாடு சரியானதா? இந்த இரண்டு குழுக்களிலும் முஸ்லிம் கட்சித் தலைவர் ஒன்றிலும் அவரின் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றதிலும் பங்குபற்றியது, முன்னைய ஆட்சியின் தோல்விகளை மூடி மறைத்து இஸ்லாத்தின் மீதும் அதன் போதனைகளையும், மத்ரஸாக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதையா இவர்கள் செய்தார்கள் என்பது பற்றியும் முஸ்லிம்கள் ஆராய வேண்டும்.
குண்டுதாரிகள் தெரிவித்துள்ள காரணிகள் அவர்கள் தங்களது வன்முறையை நியாயப்படுத்த தெரிவித்துள்ள விடயங்களாகவே காணப்படுகின்றன. வன்முறையை ஆரம்பிப்பதையோ நாடுவதையோ எந்தக் காரணத்தையும் காரணங்களையும் வைத்து செய்ய முடியாது. அதை நியாயப்படுத்தி விடவும் முடியாது. வன்முறையை நாடுவது என்பது இஸ்லாத்திலோ எந்த ஒரு சமயத்திலோ அல்லது நாகரிகத்திலோ எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே இந்த வன்முறைகளை எந்த வகையிலும் இஸ்லாத்துடனோ அல்லது வேறு எந்த சமயத்துடனோ அல்லது போதனைகளுடனோ தொடர்புபடுத்தவும் முடியாது. ஆனால் தொடர்புபடுத்தப்பட்டு கொள்வதை தொடர்ந்து காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் வருந்தத்தக்க விதத்தில் குண்டுதாரிகளின் காரணங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்த சிங்கள - முஸ்லிம் நற்புறவையும், பௌத்த தர்மத்தின் சகிப்புத்தன்மையையும், மிகக் குறைந்த அளவில் பிரபலப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் தேசப்பற்று என்பன போன்ற விடயங்களையும் கவனத்தில் கொள்ளப்படாதவைகளாகக் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கவை.
இந்தத் தாக்குதல்கள் மிகப் பிரபலமான சர்வதேச மற்றும் உள்ளுர் சர்ச்சைகளாலும் முரண்பாட்டுக்குரிய விடயங்களாலும் கிளர்ந்த இளைஞர்களோடு தொடர்புபட்டுள்ளன என்றும் இவை இஸ்லாமியப் போதனைகளால் விளைந்தவை அல்ல என்றும் தெளிவாகப் புரிகின்றது. 
இஸ்லாமியக் கோட்பாடுகளில் எந்தப் பிழையும் இருப்பதாக இந்தக் காரணங்கள் எதுவும் குறிப்பிட்டு நிற்கவில்லை. அல்லாஹ்வின் அன்புக்காக தாம் செய்வதாக குண்டுதாரிகள் குறிப்பிட்டுள்ளமை போலித்தனமான அல்லது அபத்தமான ஒன்றாகும். ஏனெனில் தற்கொலை செய்து கொள்வதை இறைவனே தடுத்துள்ளான். அந்த வகையில் இறைவன் தற்கொலை குண்டுதாரிகளை வெறுக்கின்றான்.
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம் என்பனவற்றைக் குறிப்பதாகும். யுத்தத்தின் அழிவுகளை அது ஊக்குவிப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. மோதல்கள் உருவாக்கப்படுவதை இஸ்லாம் தடுக்கின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் தற்காப்புக்கான அடிப்படையில் கொலைகள் உட்பட சுயபாதுகாப்பை அது அனுமதிக்கின்றது. உலகில் தற்போது அமுலில் உள்ள எல்லா நவீன சட்டங்களும் இது போன்ற முறைகளைஅங்கீகரித்துள்ளன.
பெரும்பாலும் குண்டுத் தாக்குதலை நடத்திய பிரிவின் தலைவனான சஹ்ரான் ஹாஷிமின் கதையை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத விசாரணைப் பிரிவு தனது கருத்துக்களை முன்வைத்துள்ளது. மிக நவீன கையடக்கத் தொலைபேசி வசதிகளைக் கொண்டிருந்த சஹ்ரான் உடையது மட்டுமன்றி ஏனைய எல்லா குண்டுதாரிகளினதும் உண்மையான அசல் பதிப்புக்கள் எதுவும் பொதுக் களஅரங்கில் இல்லை. குண்டுத் தாக்குதல் இடம்பெற சற்று முன்னர் சகல குண்டுதாரிகள் மத்தியிலும் இடம்பெற்றுள்ள உண்மையான முழுமையான தொடர்பாடல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் பங்களிப்புக்கள், இந்தப் பிராந்தியத்தில் ஆயுத விற்பனையை ஊக்குவிப்பவர்களின் விபரங்கள் என்பன பற்றிய விசாரணைகள் மூலம் இந்த நாசகாரப் பணியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »