Our Feeds


Friday, June 5, 2020

www.shortnews.lk

இப்றாஹீம் ஹாஜி வீட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு பற்றி அங்கிருந்த அனைவருக்கும் முற்கூட்டியே தெரியும் - ஆணைக்குழுவில் சாட்சியம்

 


தெமட்டகொடை மஹவில பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றமை குறித்து அந்த வீட்டில் தங்கியிருந்த அனைவரும் முன்கூட்டியே அறிந்திருந்ததாக தம்மால் உணரமுடிகின்றதென கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் வசந்த சிசிர குமார விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு குண்டு வெடிப்புக்கள் அந்த இடத்தில் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த வீட்டிலிருந்த பெண்கள் மற்றும் இப்ராஹீம் ஆகியோர் எந்தவித அச்சமும், சலனமும் இன்றி இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த தரப்பினர் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறாத வகையில் செயற்பட்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண பண்டாரவின் தலைமையிலான குழுவுடன் தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் கீழ் மாடியில் தேடுதல்களை நடத்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேல் மாடியில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேடுதல்களை நடத்திய வேளையிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டு வெடிப்பில் தான் அதிர்ச்சியடைந்திருந்த போதிலும், கீழ் மாடியில் இருந்த பெண்கள் எந்தவொரு சம்பவமும் இடம்பெறாத வகையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் சாட்சியளித்துள்ளார்.

அதன்பின்னர் பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்ததை அடுத்து மேல் மாடிக்கு சென்று விடயங்களை ஆராய்ந்ததாக அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண பண்டார, பொலிஸ் கான்ஸ்டபிள் துலஞ்ஜன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டார ஆகியோர் உயிரிழந்திருந்ததை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »